கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது.
சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம்.
"நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது.
கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமாக....
"நாம் பிறருடைய பார்வைக்காக வாழப் பழகிவிட்டோம். எமக்கென்று தனித்துவம் உண்டு. தனிப் பாணியுண்டு அவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்காமல் மாயையால் கட்டுண்டுக் கிடக்கின்றோம்.
மேற்குலக வெள்ளைக்காரர்கள் என்ன செய்கிறார்களோ அதையே நாம் கடைபிடிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மற்றவர்கள் நம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்பது பலரது எண்ணம்.
ஏன் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்?
ஏன், நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்? எமக்கென உள்ள தனியான அடையாளங்களை வேற்றுக் கலாசார மோகத்துக்காக ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?
சிலர் காலிலுள்ள உரோமங்களை சவரம் செய்து கொள்கிறார்கள். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏன் என்று கேட்டால் மற்றவர்கள் பார்ப்பதற்காக என்கிறார்கள். தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரன் செய்துகொள்ளும் இவ்வாறானவற்றை நாம் ஏன் பின்தொடர வேண்டும்?
இலங்கையிலிருந்து லண்டன் செல்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். புதிய சப்பாத்து, புதிய உடை என மேலை நாட்டுக் கலாசாரத்துக்கு ஏற்ப அவர்கள் உடையணிந்திருப்பார்கள். ஆனால் அங்கு சென்று பார்த்தால் வெள்ளைக்காரர்களோ மிகவும் எளிமையான உடையில் இருப்பார்கள்.
எங்களுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுத்து பிறருடைய பார்வைக்காக வாழ்கிறோம்.
சரி, ஆகட்டும்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதுமே தாழ்மையுணர்வு இருக்கும். 'எங்களால் முடியாது' என்றே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஏன் முடியாது என அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
நீ... நீயாக இரு. எதற்காகவும் உன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்படித்தான் சாப்பிடுவேன் என்றால் அப்படியே சாப்பிடு. இப்படி உடையணிவது தான் உனக்குப் பிடிக்கும் என்றால் அப்படியே அணிந்துகொள்.
இந்தப் பழக்கத்தை நமது இளம் சமுதாயத்தினரிடையே வளர்க்க வேண்டும். எங்களுடைய தனித்துவம் இழக்கப்படுவதற்கு நாமே காரணமாக அமைந்துவிடக் கூடாது....." இவ்வாறு அவரது உரை தொடர்கின்றது.
கம்பவாரிதி தனது ஆணித்தரமான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பலர் தாம் அணிந்திருந்த உடைகளை ஒருதரம் பார்த்துக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.
உண்மையில் இது சிந்திக்கக் கூடிய விடயம் தான். தமிழ்ச் சங்கத்தில் நேற்றுக் கூடியிருந்தோர் இதனை நன்றாக உணர்ந்திருப்பார்கள். நல்ல விடயங்கள், அதுவும் நமது நன்மைக்காகக் கூறப்படும்போது, அவை தொடர்பாக நாமும் எமது சிந்தனையைச் செலுத்த வேண்டியது அவசியமல்லவா?
No comments:
Post a Comment