Tuesday, September 24, 2013

உண்டாகட்டும் ஒரு மாற்றம்

ஒரு நாள் காலைநேரம், ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது. ஒரு இளைஞன் ஒருவன், அலைகளினூடேயும், கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.

முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட்டது. அவன் அருகில் சென்றார். அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி, மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். "தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர். "ஐயா! வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது, அலை உள்வாங்குகிறது. எனவே, கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்துகொண்டிருக்கிறேன். இல்லையென்றால் அவை செத்துவிடும்." என்றான் இளைஞன்.

"தம்பி! இந்தக் கடற்கரையோ பல மைல்கள் நீளமானது. கரை முழுவதும் ஏராளமான மீன்கள் ஒதுங்கியுள்ளன. உன் முயற்சியால் ஒரு மாற்றமும் விளையப்போவதில்லை." என்றார் முதியவர். இளைஞன் புன்னகைத்தான். குனிந்து மற்றொரு மீனை எடுத்துக் கடலில் வீசியவாறே "மாற்றம் இந்த மீனுக்கு விளைந்துள்ளது ஐயா!" என்றான். 

ஆம். நம்முடைய ஒவ்வொரு சிறிய நல்ல செய்கையும் மற்றவர்கள் மீது தாக்கத்தை உண்டாக்க வல்லது. பார்ப்பதற்கு மிகச்சிறியதாக ஒருவருக்குத் தோன்றக்கூடிய உதவி, மற்றொருவருக்கு மிகப்பெரியதாக இருக்கலாம். உதவியோ, நல்ல செயல்களோ மட்டுமல்ல, நாம் சரியான நேரத்தில் கூறும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவரது வாழ்வை மாற்றியமைக்க இயலும்.

ஈசுவர சந்திர வித்யாசாகர் என்ற பெரிய கல்வியாளர் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கொரு சிறுவன் அவரிடம் ஒரு ரூபாய் பிச்சை போடுமாறு கேட்டான். அவர் அவனைப்பார்த்து "நான் உனக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டதற்கு அச்சிறுவன் ஐம்பது பைசாவை என் அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஐம்பது பைசாவிற்குப் பழம் வாங்கிவந்து விற்பேன்" என்று சொன்னான். ஈசுவர சந்திரர் அவனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தார். 

வருடங்கள் கழிந்தன. மீண்டும் அதே ஊருக்கு ஈசுவர சந்திரர் விஜயம் செய்தார். அப்பொழுது ஒரு பெரிய மனிதர் வந்து அவரைப் பணிந்து வணக்கம் செய்து "ஐயா! என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார். "மன்னிக்கவும். எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லையே! நீங்கள் யார்?" என்று வினவினார் ஈசுவர சந்திரர். "நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்த பொழுது ஒரு சிறுவன் தங்களிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்டான். தாங்களும் கொடுத்தீர்கள். அந்த ஒரு ரூபாயை முதலீடாகக் கொண்டு அவன் பழ வியாபாரம் தொடங்கி, சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்து இப்பொழுது ஒரு பெரிய பணக்காரனாகி விட்டான். அந்தச் சிறுவன் நான்தான். இப்பொழுது மீண்டும் நீங்கள் இந்த ஊருக்கு வருகிறீர்கள் என்று கேள்விப்பட்டு உங்களைக் கண்டு நன்றி தெரிவிக்க வந்தேன்" என்று சொன்னாராம் அந்தப் பெரிய மனிதர்.

ஒரு ரூபாய் என்பது பெரிய தொகையல்ல. ஆனால் அது ஒரு சிறுவனின் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிட்டது அல்லவா? நம்மாலும் பிறர் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான வல்லமை நம்மிடம் உண்டு. இத்தகைய சிறிய நன்மைகள் பிறருக்கு உதவுவதற்காக மட்டுமல்ல, நம் மனதில் நம்மைப்பற்றியே ஒரு நல்ல மதிப்பீடும் நேர்மறையான உணர்வும், ஒரு திருப்தியும் உண்டாக இவை வழி வகுக்கும்.

என்னுடைய நண்பர் ஒருவர், பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதைக் கடுமையாகக் கண்டனம் செய்வார். நான் எதிர்ப்படும் பிச்சைக்காரர்களுக்கு ஓரிரு ரூபாய் கொடுத்தால் கேலி செய்வார். "நீ பிச்சை எடுப்பதை ஊக்குவிக்கிறாய்" என்றும் சொல்வார். ஒரு முறை ஒரு வயதான மனிதர், மலிவுவிலை ஊதுபத்திகளை விற்றுக்கொண்டு வந்தார். என் நண்பரை அவர் அணுகி ஒரு பாக்கெட் வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சியும் அவர் வாங்கவில்லை. நான் அந்த முதியவரிடம் இருந்து இரு பாக்கெட் ஊதுபத்தியை வாங்கிக்கொண்டேன். பின் என் நண்பரிடம் கேட்டேன் "நீங்கள் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்காதே என்கிறீர்கள். சரி. அப்படியானால், உழைத்தே பிழைக்கவேண்டும் என்ற உணர்வுடன் இந்தத் தள்ளாத வயதில் வந்து ஊதுபத்தி வியாபாரம் செய்பவரையாவது ஊக்குவிக்கவேண்டுமல்லவா? அதையும் செய்யவில்லை என்றால் எப்படி?" என்று. 

முகமது யூனுஸ் என்ற வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளாதார மேதையைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அவரும் பிச்சையிடுவதைக் கண்டிக்கிறார்தான். ஆனால் என் நண்பர் போல் வறட்டு வாதமல்ல அது. பிச்சை எடுக்க நேர்வது, வறுமையினால்தானே! அந்த வறுமையை நீக்கிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது அவர் கருத்து. அவர் அதைச் செய்து காட்டியவர். தாம் துவங்கிய கிராம வங்கிகள் (Grameen Bank) மூலம் பல்லாயிரக்கானவர்களை வறுமைக்கோட்டை விட்டு வெளியில் வரச்செய்தவர். சின்ன விதையாகத் தோன்றிய அந்த மௌனப்புரட்சிதான் இன்று உலகளாவிய முறையில் சுய உதவிக்குழுக்களாகப் பரிணாமம் பெற்று, பல விழுதுகளுடன் ஆலமரமாய்ப் பலரையும் தாங்கி நிற்கிறது. இது இத்தனை பெரிய அளவில் வெற்றி பெறும் என்று அவரே முதலில் கருதியிருக்கமாட்டார். 

ஆனால், நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நாம் "பிச்சை ஒரு சமூகக்கேடு" என்று கண்டிக்கிறோம். அது சமூகக்கேடு எனில் அதைக்களைவதற்கு நாம் என்ன முயற்சி செய்யலாம் என்று நாம் யோசிப்பதில்லை. 'அபியும் நானும்' திரைப்படத்தில் வருவது போல் ஒருவரை நாம் வீட்டில் சேர்ப்போமா? பிச்சை எடுக்கின்ற ஒருவரை நமது பணியாளராக நியமிப்போமா? அத்தனை பரந்த மனப்பான்மை நமக்கு உண்டா? இல்லை. முகமது யூனுஸ் போல அவர்களுக்குக் கடனுதவி செய்து, சுய தொழில் செய்ய ஊக்குவிப்போமா? இல்லை. நம்மால் முடிந்த அளவு, ஒரு வேளை உணவோ, ஒரு பழைய உடையோ, அல்லது ஒன்றிரண்டு ரூபாய் பணமோ தரக்கூட நமக்கு மனமிருப்பதில்லையே! 

இது மட்டும்தான் நல்ல செயல் என்றில்லை. வழியில் கிடக்கும் வாழைப்பழத்தோலை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுவது கூட ஒரு சேவைதான். ஒரு கண்பார்வையற்றவர் சாலை கடக்க உதவுவதும், ஒரு முதியவர் அல்லது கர்ப்பிணிப்பெண்ணுக்கு நாம் அமர்ந்திருக்கும் இருக்கையை விட்டுக்கொடுப்பதும், நம்மிடமிருக்கும் பழைய புத்தகங்களை யாருக்கேனும் தானமளிப்பதும், பள்ளிக்கு நேரமாகிவிட்டது என்று பரிதவிக்கும் மாணவனை அல்லது நேர்முகத்தேர்விற்குப் போகவேண்டிய ஒருவரை நமது வாகனத்தில் ஏற்றிச் செல்வதும்... இப்படி எத்தனை எத்தனையோ நல்ல செயல்களை நாம் செய்யலாம்.

ஒரு நாளைக்கு ஒரு சிறு நல்ல செயலாவது செய்வது என்று உறுதி எடுத்துக்கொள்வோம். நமது வாழ்வை மட்டுமல்ல.. நமது அருகில் இருக்கும் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றலாம். ஒரு மாற்றத்தை உலகில் உண்டாக்கலாம்.

No comments:

Post a Comment