Wednesday, September 25, 2013

தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள்.

01. ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் கைகளைக் கோர்த்தபடி கண்ணாடியை பார்த்துக் கொண்டே.. என்னால் முடியும்.. என்னால் முடியும்.. எதையும் செய்ய என்னால் முடியும்.. சாதிக்க முடியும்.. சாதிக்க முடியும் எதையும் என்னால் சாதிக்க முடியும் என்று கூறுங்கள். சூழல், காலம், இடம், சக மனிதர்கள் தரக்கூடிய எதிர்மறைகளை இப்பயிற்சி நீக்கும்.

02. இலட்சியங்களையும் கருத்தேற்றங்களையும் பெரிதாக எழுதி, அல்லது அச்சிடப்பட்ட வாக்கியங்களை உங்கள் அறையின் சுவரில் எழுதி ஒட்டி வைத்திருங்கள்.

03. நல்ல வாசகங்களை மறவாமை வேண்டும், அவை கண்களைவிட்டு அகலாமை வேண்டும் அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள்.

 04. உங்கள் இலட்சியத்தை எழுதி இதயத்தோடு இருக்கும் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். இலட்சியத்தோடு சேர்ந்து உங்கள் இதயமும் துடிக்கிறது என்று எண்ணுங்கள். இப்படிச் செய்தால் ஆழ் மனது விழித்துக் கொள்ளும்.

 05. காலை எழுந்ததும் கைகளைப் பார்த்து வணங்குங்கள். விரல் நுனிப்பகுதியில் லக்சுமியும், மையப்பகுதியில் சரஸ்வதியும், மணிக்கட்டில் கோவிந்தனும் இருப்பதாகக் கூறுவார்கள். ஆலய தரிசனத்திற்கு உங்கள் கைகள் உள்ளன.

 06. உங்கள் உடலை தெய்வீக ஒளி சூழ்ந்துள்ளதாக எண்ணி, உள்ளங்கையில் அந்தக் காட்சியைக் காணுங்கள். உடல் நலத்துடன் நீங்கள் ஆடுவதாகவும், பாடுவதாகவும் காணுங்கள், மகிழ்ச்சியை உணருங்கள்.

07. பயிற்சிகளால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.. பயிற்சிகளால் எட்ட முடியாதது எதுவுமே இல்லை… தீய ஒழுக்கங்களை நல்ல ஒழுக்கங்களாக மாற்ற வல்லவை பயிற்சிகள்.. தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள். மனிதர்களை தேவர்களாக உயர்த்தக்கூடியவை இப்பயிற்சிகளே.

08. கரும்பு – மிளகாய் – மலர்ச்செடி இந்த மூன்றையும் அருகருகாக நட்டு நீரை ஊற்றி வளர்த்தான் ஒருவன். ஊற்றியது ஒரே கிணற்றின் நீர்தான் ஆனால் மிளகாய் உறைத்தது, கரும்பு இனித்தது, பூ வாசமாக இருந்தது.. காரணம் இவை மூன்றும் ஒரே நீரை உண்டு வளர்ந்தாலும் தத்தமது இயல்பை மாற்றவில்லை.

09. கரும்பு, மிளகாய், பூமரம் ஆகிய மூன்றும் மற்றவருக்காக தமது இயல்பை மாற்றவில்லை. மற்றவருக்கு பயந்து வாழ்ந்தால் மிளகாய் இனிக்னும் கரும்பு உறைக்கும். கடைசியில் இரண்டுமே சந்தையில் செல்லாக்காசாகப் போய்விடும். மற்றவர்களுக்கு பயந்து தமது இயல்பை மாற்றுவோர் செல்லாக்காசுகளாகவும், நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.

 10. மற்றவர் உனக்கு எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ நீ அதை மற்றவர்களுக்கு செய்யாதே.. அதைப் புரிந்து கொண்டால் உன் இயல்பை மாற்ற வேண்டியதில்லை.

11. நாம் என்ன நினைத்தாலும் அது நடக்காது, எதெது வரவேண்டுமென்றிருக்கோ அதது வந்துதான் தீரும். நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்றை நினைக்குமில்லையா.. என்று கூறுவேருடைய குரலுக்கு செவி கொடுக்காதே… 12.

12. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா உனது தகுதிக்கு ஏற்றாற் போல பாரு..! என்போர் பேச்சைக் கேட்காதே.

 13. கேலியான பழமொழிகளை சொல்லும்போது இளையோர் உள்ளம் சுக்கு நூறாக உடைந்துவிடும் ஆகவே இப்படியான எதிர்மறைகளைப் பேசாதே.

14. குழந்தையிடம் ஒரு டம்ளர் நிறைய நீரைக் கொடுத்து, சிந்தாமல் எடுத்துப் போ என்று உறுக்கிக் கூறுங்கள்.. அதன் கைகள் நடுங்கி நீர் நிலத்தில் கொட்டுப்பட்டுவிடும். நீரை எடுத்துச் செல் என்று சர்வசாதாரணமாக சொல்லுங்கள் நீர் சிந்தவே வழியில்லை.

 15. எந்தச் சொல்லும் நம்மில் உயிர்ப்பை, வளர்ச்சியை தோற்றுவிக்க வேண்டும். உறங்கிக் கிடக்கும் தன்னம்பிக்கையை தூசு தட்டி எழுப்ப வேண்டும்.

16. சாவின் கரையில் இருப்பவனுக்குக் கூட, வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை நமது வார்த்தைகள் தர வேண்டும்.

 17. தளர்ந்து விழுந்தவனைக்கூட துடிப்புடன் எழச் செய்ய வேண்டும். கரைந்த நிழலைக்கூட நிறைந்த உருவமாக மாற்ற வேண்டும்.

18. முயற்சியுடையவர்களை தப்பான பழமொழிகளைக் கூறி கேலி செய்யக் கூடாது.

19. பழமொழிகள் எதுகை மோனையுடன் இருப்பவை, அவை சட்டென ஆழ்மனதிற்குள் நுழைந்துவிடும். அகவே எதிர்மறையான பழமொழிகளை பேச வேண்டாம்.

20. மனிதர்கள் வார்த்தைகளால் உயிர் வாழ்வது உண்மை, அதுபோல வார்த்தைகளாலேயே உயிரிழப்பதும் உண்டு. ஆகவே வார்த்தைகளை சரியாக பாவிக்க வேண்டும்.

 21. எது இலட்சியமோ அது நமது மனதில் கனன்றுகொண்டே இருக்க வேண்டும், அந்தத் தணலில் மனம் சதா விழித்துக் கொண்டே இருக்கவும் வேண்டும்.

22. நம்பிக்கையின் பாதுகாப்பில் எதிர்பார்ப்பு என்ற வெளிச்சத்தில் உழைப்பு என்ற பயணத்தை நடாத்த வேண்டும்.

23. ஒவ்வொரு நாளும் குன்றாத உற்சாகத்துடனும், தணியாத ஆவலுடனும், திறமையான உழைப்புடனும் முன்னேற வேண்டும்.

24. என்னுடைய உழைப்பில் தீவிரமாக இருக்கிறேன். ஊக்கத்துடன் எனது காரியங்களை செய்கிறேன் என்று எண்ண வேண்டும்.

25. சராசரி மனிதருக்குரிய மூட நம்பிக்கைகளையும் பயங்களையும் தவிர்த்து விடுங்கள். வாழ்வின் அழிவற்ற மாறுதலுக்குட்படாத முன்னேற்றக் கருத்துக்களை நம்புங்கள்.

No comments:

Post a Comment