இனி இன்றய நல்ல தகவல்கள்.
பன்நெடுங்காலமாகவே மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு விமோசனம் உண்டா ? அவனுடைய அறியாமை இருளைப் போக்கிட முடியுமா ? அவனது அடிமை விலங்குகளை உடைத்தெறிய முடியுமா ? எனப் பலவாறு சிந்தித்து அதற்கான வழிகை தேடத் தொடங்கிய அறிஞர் இங்கர்சாலின் கருத்துக்களில் இருந்து..
01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமார்ந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும்.
02. ஒவ்வொரு தொட்டிலும் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறது, ஒவ்வொரு சவப்பெட்டியும் எங்கே போகிறேன் என்று கேட்கிறது.
03. எந்தப் பெண்ணை மனப்பூர்வமாக காதலிக்கிறாயோ அவள் என்றும் உன் கண்களுக்கு குமரியாக தோன்றுவாள்.
04. எவ்வித நோக்கமும் இன்றி மனிதனை இயற்கை படைக்கிறது, அதுபோலவே எவ்வித நோக்கமும் இன்றியே அழிக்கவும் செய்கிறது.
05. தான் ஏமாற்றப்படுகிறேன் என்ற உண்மையை எவன் கண்டு பிடிக்கிறானோ அப்போதே அவன் இருட்டில் ஒரு விளக்கை ஏற்றியவனாகின்றான்.
06. பெற்ற சுதந்திரத்தை மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க தவறுபவன் அயோக்கியன் மட்டுமல்ல களங்கம் உடையவனும் ஆவான்.
07. இவ்வுலகில் மிகவும் புரட்சிகரமானது கல்வி. ஓர் எழுத்தை கற்றுத்தருவது ஒரு புரட்சிக்கு வித்திடுவதாகும். ஒரு பாடசாலையைக் கட்டுவது கோட்டையை கட்டுவதற்கு ஒப்பான செயலாகும்.
08. மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவரையும் மகிழச் செய்வதுதான். பிறகு என்று இல்லாமல் இன்பத்தை இப்போதே அனுபவி.
09. இயற்கையின் தடைகளை தாண்டினால் மட்டுமே மனிதனால் முன்னேற முடியும். உழைப்பினாலும் சிந்தனையாலுமே அது சாத்தியமாகும். அனைத்திற்கும் உழைப்பே அத்திவாரமாகும். கடின உழைப்பில்லாது முன்னேற்றம் என்பது முடியாத காரியமாகும்.
10. வயலில் உழைப்பவன், விதைத்து அறுப்பவன், உலைக்களத்தின் சுவாலையில் முகம் சிவப்பவன், கோடரியால் மரத்தைப் பிளப்பவன், கண்டுபிடிப்பாளன், கடலின் அலைகளோடு போராடுபவன், ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் ஆகியோரைப் பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் அமையும். இவைகளை துப்பாக்கியால் தீர்மானித்தால் துர்ப்பாக்கியமே பரிசாகக் கிடைக்கும்.
11. காதலும் மரணமும் கை கோர்க்கும்போது எழுவதுதான் அற்புதமான இசை. உணர்ச்சிகள் அனைத்திலும் சிறந்தது காதல்..! மரணம் என்பது அதன் நிழல்… ! ஆமாம்… கல்லறைகளின் கரையில் பூத்துள்ள மலர்களே காதலாகும்.
12. படித்தவனே சிந்திக்கிறான்! சிந்திக்கிறவனே முன்னேறுகிறான்.
13. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கும் குடும்பத்தில் அமைதி நிலவும்.
14. ஆன்மாவின் சட்டபூர்வமான பாதுகாவலன்தான் இன்பம். அந்த இன்பமே ஒருவனது உண்மையான ஆஸ்தி.
15. நன்மைக்கு நன்மை செய் ! தீமைக்கு நீதி வழங்கு !
16. இல்லாத கடவுளின் பலிபீடம் கணக்கற்ற தலைமுறைகளாக மனித இரத்தத்தால் கழுவப்பட்டு வருகிறது.
17. உயிருடன் இருப்போருக்கு உதவி செய் !சிறந்தவரிடம் நம்பிக்கை வை ! இவைகளே உனக்குப் போதும்.
18. ஏழ்மை ஒரு நோய் அதை ஏற்றுக் கொண்டவுடன் அது நிலைபெற்றுவிடுகிறது. பிறகு அதை அசைப்பது கடினம்.
19. ஏழ்மையில் பிறப்பது அவமானகரமானதல்ல ஆனால் அது மாற்ற முடியாத ஒன்றொன நினைப்பதே அவமானகரமானதாகும்.
20. ஒருவனைத் தூண்டி திட்டமிடச் செய்து, உயர் நோக்கங்களை அடைய வைக்கும் உபாயமே ஏழ்மையாகும்.
No comments:
Post a Comment