Tuesday, September 24, 2013

நமது வாழ்க்கை -கதை

ஒரு மனிதன் தனியாக நடந்து கொண்டிருந்தான். அப்போது அருகில் இருந்த மற்றைகள் ஆடுவது தெரிந்தது. திரும்பிப் பார்த்தான் ஒரு யானை நின்றது. அவன் அலறியபடியே ஓடலானான், யானையும் அவனை விரட்டியது.

வேகமாக ஓடிவந்தவன் அப்படியே ஒரு மலை உச்சிக்கு வந்துவிட்டான். அங்கே முகட்டில் ஒரேயொரு மரம் இருந்தது, அந்த மரத்தில் ஏறி ஒரு கொப்பில் தொங்கினான். யானை அவனை பிடிப்பதற்காக தும்பிக்கையை நீட்டியது. அதனிடம் அகப்படாமல் அடுத்த கொப்பிற்கு தாவினான். அப்படியே கீழே பார்த்தான். அங்கே அதல பாதாளம் தெரிந்தது. கீழே விழுந்தால் எலும்பையும் எடுக்க இயலாது.

அந்தப் பாதாளத்தையே கூர்ந்து பார்த்தான். அந்த பள்ளத்தின் படியில் ஒரு சிங்கம் வெகுநாள் பசியோடு அவனையே விழுங்க வாயைத் திறந்தபடி இருந்தது.

மேலே பார்த்தான், இரண்டு குருவிகள் ஒன்று கறுப்பு, மற்றது வெள்ளை ஒன்று மாறி ஒன்று மரக்கொப்பை கொத்தியபடி இருந்தன. அந்த அதிர்வில் மரத்தின் உச்சியில் இருந்த தேன்கூடு உடைந்து தேன் துளிகள் பொட்டு பொட்டென அவன் வாயை நோக்கி சிந்தியன. அந்தத் தேன் துளிகளை சுவைத்தபடி அவன் தொங்கினான்.

இந்தக் கதையில் வரும் யானைதான் வாழ்க்கையின் பிரச்சனை. அதற்குப் பயந்து ஓடி மரத்தில் தொங்குபவனே மனிதன்.

பாதாளத்தில் இருக்கும் சிங்கமே நெருங்கும் மரணம்.

அவன் தொங்கும் மெல்லிய கொப்புத்தான் வாழும் காலம் என்ற அவனுடைய ஆயுள் காலம்.

கறுப்பு வெள்ளை குருவிகள் என்பது இரவும் பகலும். ஒவ்வொரு இரவும் பகலும் முடிய முடிய வாழ்வும் முடிகிறது. வாழ்க்கை என்னும் மரக்கொப்பை முறித்து பாதாளத்தில் விழுத்தும் குருவிகள்.

அவன் வாயில் சிந்தும் தேன்துளிதான் வாழ்வில் காணும் இன்பம்.

இதுதான் நமது வாழ்க்கை என்கிறது கதை.

இதை அறியாமல் தினசரி அச்சத்துடனும், துன்பத்துடனும் வாழ்கிறான் மனிதன். இன்பத்தை பகிஷ்கரிக்க வேண்டுமென ஓலமிடுகிறான்.

பைத்தியக்காரரின் பேச்சுக்களை கேட்காமல் கிடைக்கும் இன்பமே நிஜம் என்பதை உணருங்கள். அந்த மகிழ்வெனும் தேன் துளிகளை உடனடியாகக் குடியுங்கள் என்பது கதையின் பொருளாகும்.

No comments:

Post a Comment