Tuesday, September 3, 2013

ஆன்மிக தகவல்கள்

திருநீறு பூசுவதன் தத்துவம் என்ன?

"சுந்தரமாவது நீறு' என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். அதாவது, முகத்திற்கு ஒளி பொருந்திய அழகைக் கொடுப்பது திருநீறு. தற்காலத்தில் மலிந்து கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சுத்தமான பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறைப் பூசிக் கொண்டால் தோல் சம்பந்தமான நோய்கள் வராது. இதற்கு பஸ்மம் என்றும், விபூதி என்றும் பெயர். "பஸ்மம்' என்றால் "செய்த பாவங்களைப் போக்கி இனி பாவம் செய்யாத நல்ல சிந்தனையைத் தரக்கூடியது' என்று பொருள். "விபூதி' என்றால் "ஐஸ்வர்யம்' என்று பொருள். விபூதி வீட்டிலும் நெற்றியிலும் இருந்தாலே லட்சுமி கடாட்சம் பெருகும். ""சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார், இடர்களையாய் நெடுங்களம் மேயவனே'' என்றும் பாடுகிறார் சம்பந்தர்.

அதிகாலை எழுந்தவுடன் ஸ்ரீராமஜெயம் எழுதுவது நன்மை தருமா?

தாராளமாக எழுதலாம். அன்று முழுதும் புத்துணர்ச்சியும், நல்ல சிந்தனையும் நிறைந்திருக்கும்.

* சஷ்டியப்த பூர்த்தி நடத்தும்போது பிள்ளைகள் எல்லாருக்கும் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது உண்மையா?

அப்படி எதுவும் சட்டம் கிடையாது. அறுபது வயது பூர்த்தியாகும் நாள் என்பது எந்தக் காரணத்திற்காகவும் காத்திருக்காது. எனினும், திருமண வயது வந்த பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் மணம் முடித்து மாப்பிள்ளை மருமகள் என எல்லாருமாகச் சேர்ந்து சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தை நடத்தினால் தான் மகிழ்ச்சியாக இருக்கும்!

* சுமங்கலிகள் மெட்டி அணிவது ஏன்?

திருமண பந்தம் ஏற்பட்டு விடுவதன் அடையாளம் தாலிகட்டுதல். அது போன்று மணமகளும், மணமகனும் கற்பு நெறியுடனும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வது என்று உறுதி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியாக அம்மி மிதித்தல் நடத்தப்படுகிறது. இதன் அடையாளமே மெட்டி அணிவித்தல்.

ஹோமம் முடிந்தபின் எத்தனை நாள் கழித்து ஹோம குண்டத்தைக் கலைக்க வேண்டும்?

ஹோமத்தில் இட்ட பொருட்கள், பழங்கள் யாவும் பஸ்மமாக வேண்டும். அதன் நெருப்பு தானாக அணைந்து சாம்பலாக வேண்டும். மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் குண்டத்தை கலைத்து விடலாம். சாம்பலை எடுத்து விபூதியுடன் கலந்து இட்டுக் கொள்ள வேண்டும். மீதமுள்ளதை செடி கொடிகளுக்குப் போட்டால் நல்லது. ஆறு, குளங்களிலும் போடலாம்

No comments:

Post a Comment