நடைமுறையில் பல பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில பழமொழிகள், அவை எதற்காக சொல்லப்பட்டனவோ அதில் இருந்து மாறி வழங்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சில பழமொழிகளும், அதற்குச் சரியான விளக்கமும் இங்கே தரப்பட்டுள்ளன.
உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு
இப்படி ஓரு பழமொழி உண்டு. இது மிகவும் கருத்துள்ள பழமொழி.
இந்தப் பழமொழியில் வரும் தொண்டர் என்பது யார் என்று எண்ணுகிறீர்கள்? விபூதி பூசுகின்றவனை தொண்டன் என்று நினைக்காதீர்கள். ருத்திராட்சம் அணிந்து இருப்பவனும் தொண்டனாக மாட்டான். பஜனை செய்பவனையும் தொண்டனாக எண்ண முடியாது.
பின், தொண்டன் என்பவன் யார்?
தொண்டன் என்றால் வேலை செய்கின்றவன் என்று பொருள். உனக்கு மட்டும் களைப்பு என்பது சொந்தம் அல்ல. இளைப்பு என்பதும் உனக்கு மட்டும் அல்ல. உன் வீட்டு வேலைக்காரனுக்கும் உண்டு. அவனுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். களைப்பு அவனுக்கும் இருக்கும். அவனைக் குடல் அறுக்க வேலை வாங்காதே. தொடர்ச்சியாக வேலை செய்யச் சொல்லாதே, அவனையும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்.
என்பதுதான் இந்த பழமொழியின் பொருள்.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்
குழந்தை இல்லாதவர்கள் சஷ்டியில் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்தால், அவர்களது அகத்திலே (கருவிலே) இருக்கக்கூடிய பையிலே கரு உற்பத்தியாகும் என்ற பொருள்படக் கூறிய இந்த பழமொழியை இப்பொழுது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று சாப்பாட்டிற்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.
கொன்றால் பாவம், தின்றால் போயிற்று!
ஆடு, கோழி, பன்றி போன்ற வாயில்லா ஜீவன்களை கொன்ற பாவம் தின்றால் போய்விடும் என்று தான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படியில்லை.
வாயில்லா ஜீவன்களைக் கொல்வதே மிகப் பெரிய பாவம். கொல்லப்பட்ட அந்த இறைச்சியைத் தின்பதால் ஏற்கனவே அவர்கள் சேர்த்திருந்த புண்ணியமும் போய்விடும் என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அசைவச் சாப்பாட்டுப் பிரியர்கள் இதை அப்படியே மாற்றி விட்டார்கள்.
சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல்...
செய்யும் காரியத்திற்கு பிறர் திடீரென்று இடையூறு ஏற்படுத்திவிட்டால் இந்த பழமொழியை உதாரணமாக கூறும் வழக்கம் உள்ளது. ஆனால், இந்த பழமொழிக்கு இது பொருள் அல்ல.
இதில் உள்ள கரடி என்பது மிருகத்தை குறிப்பது அல்ல. கரடி என்பது ஒருவித பறை. அதாவது, மிகுந்த ஓசை தரக்கூடிய இசை கருவி. சிவ பூஜையில் இந்த கருவியைக் கொண்டு ஓசை எழுப்பப்படும் என்பதால் அப்படி சொன்னார்கள். நாம் தான் பொருளை மாற்றி விட்டோம்.
No comments:
Post a Comment