நாம் வெற்றி அடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதே போல் தோல்வி அடைவதற்கும் பல காரணங்கள் கூறலாம். அவைகளில் முக்கியமான காரணம் நமக்கு ஏற்படக்கூடிய மன உளைச்சல் ஆகும். இந்த மன உளைச்சல் காரணமாக இன்று பலர் தமது வெற்றியை இழந்திருப்பதை நாம் நடைமுறை வாழ்க்கையில் காணலாம்.
இந்த 20ஆம் நூற்றாண்டை மன உளைச்சல் ஆண்டு என்று கூறுகிறார்கள். இன்றைய மனிதர்கள் எதற்கெடுத்தாலும் கோபம், எரிச்சல், சிடுசிடுப்பு, வெறுப்பு இவைகளை அடைவதால் அவர்களுடைய சக்திகள் அனைத்தையும் இழந்து வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்து விடுவதுபோல வெற்றிக் கனியை நழுவ விட்டு விடுவதை நாம் பார்க்கிறோம்.
டென்ஷனின் உடன் விளைவான கோபம், நம்முடைய இயல்பும் அல்ல, இயற்கையான குணமும் அல்ல. நாம் ஏன் டென்ஷன் (மன உளைச்சல்) அடையக்கூடாது என்று தெரியுமா? இந்த டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அழித்து விடுகிறது. டென்சன், கவலை, பயம் போன்ற உணர்வுகள் மனதில் தோன்றினாலும் அதன் பாதிப்புகள் உடலில் தான் ஏற்படுகின்றன.
நம்முடைய மனதிற்கும், உடலுக்குமிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். டென்ஷன், பயம் போன்றவை மனதில் ஏற்பட்டாலும் அதன் பாதிப்புகள் உடனடியாக நம்முடைய உடலில் தான் தெரிகின்றன.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுகிறார்களே அதைப் போல் தான் இதுவும். அடிக்கடி டென்ஷன் அடைவதால் நமக்கு தலைவலி, இதயத் துடிப்பு அதிகமாகுதல், அல்சர், வயிற்றுப் போக்கு, இரத்த அழுத்தத்தில் மாறுதல்கள், நடுக்கம், வாய் உலர்ந்து போதல், நீரிழிவு நோய் போன்ற உடல் ரீதியான நோய்களும் ஏற்படுகின்றன.
இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. அவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது யாருக்கும் எந்த நோய் வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. டென்ஷன் ஏற்படும்பொழுது மனமானது தனது சமநிலையை இழந்து விடுகிறது.
இதனால் சிடுசிடுப்பு, எரிச்சல், ஒருமுகப் படுத்தும் சக்தி குறைவு, ஞாபக மறதி போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. இது போன்ற மன நிலை ஏற்பட்டால் எப்படி ஒரு மனிதன் தனது காரியத்தை திறம்படச் செய்ய முடியும்? பொதுவாக கோபம் வரும்பொழுது என்ன செய்கிறீர்கள்? சிலர் அதை வெளியே காட்டி விடுகிறார்கள்.
சிலர் தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்கிறார்கள். இதில் எது நல்லது? அடக்கிக் கொள்வதா? அல்லது வெளியில் காட்டிவிடுவதா? அடக்கிக் கொள்வதால் கேன்சர் போன்ற நோய்களும், வெளியில் காட்டிவிடுவதால், உறவின் சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டு விடுகின்றன. அதற்காக கோபத்தை அடக்கிக் கொள்ளவும் கூடாது.
அதை வெளிக்காட்டுதலும் கூடாது அதை நிர்வகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கோப உணர்வில் அன்பு மற்றும் இனிமையின் குணங்களைப் பதிக்க வேண்டும். எனவே நம்முடைய டென்ஷனுக்குக் காரணம் மற்றவர்கள் தான் என்பதை விலக்கி, நாமும் காரணம் தான் என்று புரிந்து கொள்ளும் போதுதான் அதற்கான நிவாரணத்தை கண்டு அறிய முடியும்.
No comments:
Post a Comment