வாயுள்ள பிள்ளை பிழைக்கும்(பேச்சுக்கலை)
1. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
கற்றவர்களின் பேரவை முன்பாக தான் கற்றதை கற்றார் அவை ரசிக்கும்படியும் ஏற்றுக் கொள்ளும்படியும் சொல்லும் வல்லமை வாய்ந்தவர்கள் கற்றவர்களிடையே கற்றவர் போன்றவர்.என்று பேச்சுக்கலையின் சிறப்பைப் பற்றி வள்ளுவர் பெருந்தகை கூறுகின்றார்.
2.இதுவரை பேச்சுக்கலையின் அடிப்படைகள் சிலவற்றைப் பார்த்தோம்.அடுத்து சில விளக்கங்கள் எனது நண்பர் ஒருவர் பொது மக்களோடு தொடர்பு கொண்டுள்ள ஒரு பணி புரிந்து வந்தார் அவரது பணி அப்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்தது.அவர் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கான ஒரு நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன்.அந்தக் கூட்டத்தில் படுகர் இன மக்களும் ,கன்னடர் இன மக்களும் கலந்து கொண்டிருந்தனர் அவர்கள் மரியாதைக்காக ஒருவரை ஒருவர் காணும் போது சுதி,சன்னாகித்திய என்று பரஸ்பரம் சொல்லிக் கொள்வார்கள் அதாவது நல்லா இருக்கின்றீர்களா?என்று அதற்கு பொருள்.நாம் போன கூட்டம் ஒரு பொது விழிப்புணர்ச்சிக்கான கூட்டம்.நாங்கள் மலைகளின் அழகையும் அதில் வானுயர்ந்து நிற்கும் மரங்களின் அழகையும் தேயிலைத் தோட்டத்து வாசனைகளுடன் ரசித்துக் கொண்டே கூட்டம் நடை பெற்ற இடம் சென்றடைந்தோம்.
3.என் நண்பருக்கு முன்பாகப் பலர் விழிப்புணர்வுக் கருத்துக்களை பல விதமாக எடுத்துரைத்தார்கள்.நண்பரின் முறை வந்தது அவர் பேசும் போது முதலில் கூட்டத்தினருடன் ஒரு அன்னியோனியத்தை ஏற்படுத்த பின் வருமாறு பேசினார்
"நான் சமவெளிப் பகுதியைச் சேர்ந்தவன் எங்கள் ஊரில் எல்லாம் குழந்தைகளை நாங்கள் வளர்க்கும் போது அதோ மாமா வரார் பாரு கொன்னுடுவேன்னு சொல்லு ,அடிப்பேன்னு சொல்லு என்று சொல்லிக் கொடுப்போம் ஆனால் இந்தப் பகுதி மக்கள் மிகுந்த மரியாதையும் விருந்தோம்பளும் உள்ள மக்கள் ,தங்கள் குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய வார்த்தைகளான "சுதி " "சன்னாகித்திய"என்று சொல்லி வளர்க்கின்றார்கள் இந்த உங்களது மரியாதையும் விருந்தோம்பலும் எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது "
இவ்வாறு பேசியவுடன் அங்கிருந்த மக்கள் தங்களது கைத்தட்டல் மூலம் தங்களது ஆமோதித்தலை வெளிப்படுத்தினார்கள்.
4.முதலில் நாம் பேசப் போகும் கூட்டத்தில் உள்ள மக்களை நாம் அவர்களுடன் உள்ளோம் என்பது பற்றியும்,அவர்களது ஊர்,பழக்க வழக்கம் ,சிறப்பு குணங்கள் இருந்தால் அதனைப் பெருமைப் படுத்தி பேசும் போது அவர்கள் பேச்சாளரைப் பெருமையுடன் பார்க்க ஆரம்பிக்கின்றார்கள்.அவர்களது கவனம் திசை திருப்பப் படாமல் பேச்சாளரின் வார்த்தைகள் மீதும் உணர்வுகள் மீதும் தங்களை வைத்து இவர் நம்மவர் என்னும் பாணியில் மனதைச் செலுத்துவார்கள்.
5.அடுத்ததாக எனது நண்பர் தான் சொல்ல வந்த விழிப்புணர்வுக் கருத்தைக் கூட்டத்தினரிடையே பேசும் போது
"நாங்கள் இந்தக் கூட்டத்திற்கு வரும் போது வழியெங்கும் அழகான மலைகளும் அதன் மேல் வானுயர்ந்து நிற்கும் மரங்களும் எங்களுக்கு மகிழ்ச்சியை ஒரு புறம் கொடுத்தது இருந்தாலும் வானுயர்ந்து நிற்கும் மலை மேல் புல்லுருவிகளைப் போல மரங்கள், மலைகளின் உயரங்களுக்கு மேலே தங்களது ஆளுமையைக் காட்டிக் கொண்டும் மலைகளை மறைத்தும் நிற்கின்றன, ஆமாம் இப்படிப்பட்ட மலைகள் தான் எங்கும் வளர்ந்து மற்றவர்கள் தங்களை ஊடுருவ அனுமதி கொடுக்கின்றன ,ஆனால் பாருங்கள் மலைகளில் எரிமலையை அது மற்றவர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கின்றது ,உருமுகின்றது,தனது ஆளுமையைக் காட்டிச் சீறுகின்றது அதன் மேல் ஊடுருவி நிற்கவும் , தனது ஆளுமையைக் காட்டவும் எந்த மரத்திற்குத்தான் முடியும் அது மலர்களாக இருந்தாலும் கூட ,அப்படிப்பட்ட சீற்றமும் ,உருமலும் கொண்டு தனது ஆளுமையைக் காட்டும் எரிமலை போல நாம் இருப்போம், இந்தப் புல்லுருவிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் மலைகளைப் போல அல்லாமல்"
இந்தக் கருத்தை வலியுறுத்தி முடித்ததும் கூட்டத்தினரிடையே ஒரு எழுச்சி மனநிலை ,கண்களில் நீலகிரியின் அந்தக் குளிரையும் தாண்டிய வெப்பம் மினு மினுத்தது.அதன் பின்பு தான் சொல்ல வந்த கருத்து எரிமலையைப் போன்றது என்றும் ஏற்கனவே உள்ள நமது நம்பிக்கைகள் புல்லுருவிகளைத் தாங்கி நிற்கும் மலைகள் போன்றது என்றும் பேசினார் .அணைவரும் அவரைப் பாராட்டினார்கள்.
6.பேச்சுக்கலையில் வளர்ச்சியடையும் போது நாம் ஏற்கனவே தயார் செய்து கொண்டு போகும் பேச்சுக்களை விட அந்த சமயத்தில் அந்த சூழ்நிலையில் உள்ள ஒன்றை நமது பேச்சுக்கலையின் ஊடே நுழைத்து பேசுவது என்பது பார்வையாளர்களை ஈர்க்கின்றது பாதிக்கின்றது.நாமும் நமது பேச்சுக்கலையின் வளர்ச்சிக்காக சமயோசித சிந்தனையினைப் பயன்படுத்தி பேச்சுக்கலையின் அடுத்த கட்டத்திற்குள் செல்வோம்.சமயோசித சிந்தனை என்பது தன் மூளையினை சிந்தனை என்னும் நீரினால் நிரப்புவது அல்ல மற்றவர்கள் மூளையினுள் நெருப்பு என்னும் தீவிரத்தைப் பற்றச் செய்து பரவச் செய்வது.
No comments:
Post a Comment