பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் .
1.நாம் சொல்வதற்கு மட்டும் தான் நாம் பொறுப்பு மற்றவர்கள் செய்யும் செய்கைகளுக்கு அல்ல.ஒரு வெற்றிக்கான விலை என்னவென்றால் தோல்விகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் தைரியம் தான் . எல்லா செயலுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.வெற்றி பெற்றால் தானக முன் வந்து அந்த வெற்றிக்கான காரணம் நான் தான் என்று பொறுப்பேற்றுக் கொள்வதும் .தோல்வி என்றால் அதற்கான காரணம் நாம் என்று பட்டவர்த்தமாக தெரிந்தாலும் தோல்விக்கான பொறுப்பை நாமே வலிந்து ஏற்றுக் கொள்ளாமல் மற்றவர்கள் தலையில் கட்டுவதையுமே பெரும்பாலும் நாம் கடைப்பிடித்துக் கொண்டு வருகின்றோம் .
2.நம் தலையில் யாரும் தோல்விக்கான பொறுப்பை கட்டாமலும் பார்த்துக் கொள்வோம்.நான் ஒரு வல்லமை பெற்ற நபர் என்பதைக் காட்டுவதில் தான் எல்லோருக்கும் விருப்பம்.சிலர் மட்டுமே தோல்வியையும் வெற்றி மனப்பான்மையில் காட்டி அதனையும் உண்மையான வெற்றி ஆக்குகின்றார்கள்.
3.மற்றவர்களை நோக்கி உனது சுட்டு விரலைக் காட்டிக் குற்றம் சாட்டும் போது உனது மீதம் உள்ள மூன்று விரல்களும் உன்னை நோக்கி இருக்கின்றது.மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பைக் காணும் போது உன் முதுகில் இருக்கும் உத்திரத்தை நினைத்துப்பார்.தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்.என்றெல்லாம் படித்திருக்கின்றோம் இதனை நமது வாழ்வின் பல நிலைகளிலும் கடைப் பிடித்து வர வேண்டும்.
4.வாழ்க்கையில் நாம் யாராக இருந்தாலும் நமது ஏதாவது ஒரு நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்போம்.இந்த உலகில் யாரும் எந்த சூழலிலாவது ஒரு வேலைக்கோ ஒரு குடும்பத்திற்கோ ஒரு நிறுவனத்திற்கோ ஒரு நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட செயலுக்கோ அவர்கள் மட்டுமே பொறுப்பு என்ற ரீதியில் தான் வாழ்ந்து வருகின்றோம்.அதுவே ஒவ்வொரு மனிதனின் அடையாளமாக இருந்து வருகின்றது .அந்த அடையாளங்களுக்கு தினம் தோறும் சோதனைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது.
5.எப்படிப்பட்ட முடிவுகளையும் தனது அடையாளத்தின் முன்னேற்றமாக மாற்றத் தெரிந்தவர்கள் மற்றவர்கள் கூறும் குறையில் இருந்து பாடம் கற்கின்றார்கள் அல்லது அந்தக்குறையே சொல்லப்படாத நிலையில் தங்களது காரியங்களைப் படைக்கின்றார்கள்.ஆனால் சில சமயங்களில் நமது கண்கானிப்பையும் மீறி சில தவறுகளுக்கான காரணம் யார் என்பது பற்றியோ சில இழப்புகளுக்கு யார் காரணம் என்பது பற்றியோ விவாதங்கள் வரும் போது நாம் எல்லோருமே குறையைச் சொல்ல ஒரு நபரையோ அல்லது ஒரு சூழலையோ தயார் செய்து விட்டுத்தான் நமது வேலையைத் தொடங்குகின்றோம்.
6.சில சமயங்களில் நமது நிலையினைத் தக்க வைப்பதற்கும் நமது போட்டியாளரிடம் இருந்து நம்மைக் காப்பதற்கும் குற்றம் சுமத்த ஒரு நபரையோ அல்லது ஒரு சூழலையோ நாம் கூறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற சூழலில் நாம் இந்த ஆயுதத்தைப் பயன் படுத்துகின்றோம்.ஆனால் உண்மையில் எந்த சூழ்நிலையினையும் தனக்குச் சாதகமாக மாற்றத்தெரிந்தவர்களுக்கு இப்படிப்பட்ட பழிபோடுதல்களும் குற்றம் சுமத்துதல்களும் ஒரு சாதகமான சூழ்நிலைதான் .
7.முதலில் தான் தான் ஒரு குறிப்பிட்ட செயலுக்கு பொறுப்பு என்பதையும், தன்னால் மட்டுமே இந்த செயல் செய்யப்பட்டது என்பதனையும் தனது ஆளுகையினையும் இப்படிப்பட்ட சூழலில் நிலைநிறுத்திக் கொள்ளலாம் .பின்பு எல்லோரும் தோல்வி எனக் காட்டிய முடிவு அதனில் இல்லை என்பதனை வேறு கோணத்தில் எடுத்துக் காட்டலாம்.இவ்வாறு செய்ய எப்போதும் நாம் நம்மைத் தயார் நிலையில் வைத்திருக்கும் போது மற்றவர்கள் எப்போது நம் மீது பழி போடுவார்கள் என்பதை சவாலோடு எதிர் பார்த்து இருக்கலாம்.
8.இப்படி வேறு கோணத்தில் ஒரு சூழ்நிலையினை நாம் நமக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை கொண்டவர்கள் என்று மற்றவர்களிடம் நிரூபணம் செய்யும் போது யாரும் நம் மீது துணிந்து பழி போட அஞ்சுவார்கள்.நமது தலைமையின் கீழான செய்கைகள் எந்த இடையூறும் இன்றி தனது வெற்றிகரமான முடிவுகளை நோக்கிச் செல்லும்.ஆனால் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் நாம் பிறர் மீது பழி போட்டுத் தப்பிக்க முயற்சி செய்கையில் நம்மையும் தனது வேறுபட்ட கோணத்தால் வெல்லும் நபர்களும் இருக்கின்றார்கள் என்பதனை உணரவேண்டும்.மற்றவர்கள் மீது குற்றம் காணும் நபர்கள் மாற்றத்திற்கான சக்தியை இழக்கின்றார்கள்.
9.மனிதர்கள் தங்கள் கண்களை விட தங்களது காதுகளைத்தான் அதிகம் நம்புகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பழி போடுபவர்கள் எவரும் மற்றவர்களுடைய நம்பிக்கைக்கு பாத்திரம் உடையவர்களாக இருக்க மாட்டார்கள்.ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யும் வல்லமை தங்களுக்குக் கிடையாது என்பதையும், தனது இந்தக் குறையை மற்றவர்கள் வெளிப்படுத்தினால் அவர்கள் மீது மேலும் பழி போட அஞ்சாதவர்கள் என்பதை உணர வேண்டும் .இவர்களுக்கான முக்கியத்துவத்தை நாம் இழக்கச்செய்ய வேண்டும் .
10.அவர்கள் எந்த அடித்தளத்தின் மீது இருந்து இந்த பழி போடுதலை அஞ்சாமல் செய்கின்றார்கள் என்பதனை அறிய வேண்டும் அந்த அடித்தளத்தினை நமது வல்லமையால் அழிக்க வேண்டும். அப்போது மட்டுமே இவர்களை நம்மால் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.இந்தப் பதிவை படித்ததால் நீங்கள் இன்னும் மனிதர்களை புரிந்து கொள்வதில் ஒரு படி முன்னேறி இருக்கின்றீர்கள்.ஒவ்வொரு தத்துவமும் அழகானது தான் ஆனால் அதனை அறிந்து உணரத்தான் யாரும் இல்லை.இந்த பொறுப்பேற்றுக் கொள்ளல் என்னும் செயலில் உள்ள அழகை நீங்கள் உணர்ந்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன்,இல்லையென்றால் என் மீது ஏதும் குற்றம் சுமத்த வேண்டாம்.நான் இதற்குப் பொறுப்பல்ல ,நான் சொல்லியதற்குத்தான் நான் பொறுப்பு இதனை உணர்ந்ததற்கு நீங்கள் தான்.
No comments:
Post a Comment