Wednesday, January 1, 2014

முன்னேற விரும்புவோர்க்கு

முன்னேற விரும்புவோர்க்கு 

நாட்டை அறிவாளிகள் ஆட்சி செய்ய வேண்டும். 

இது கனடா நாட்டில் தங்கியிருந்த போது எழுதிய நூல். 

தூய பொதுத் தொண்டரும், மொழி - இன உணர்வாளரும், வாழ்வில் மறக்கவியலாத நண்பரும், மாந்த நேய உணர்வாளருமாகிய திரு. எஸ் இராசரத்னம் அவர்களது விருப்பப்படி எழுதப் பெற்ற நூல். 

வறுமையில் செம்மை என்ற இலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாய்த் திகழ்பவர் அன்னாரது துணைவியார் அருமைச் சகோதரி திருமதி. பவாணி இராசரத்னம் அவர்கள். 

இவர்களது அன்பான விருந்தோம்பலில் நானும் என் துணைவியாரும் மகிழ்ந்திருந்தபோது ஓர் நல்ல ஆட்சியாளன் எப்படி இருக்கவேண்டும். நாட்டை முன்னேற்ற விரும்புவோர் எத்தகைய பண்புகள் பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்களைத் திருக்குறள் - பொருட்பாலில் வள்ளுவப் பெருந்தகை வழியில் விளக்கி ஒரு நூல் எழுதித்தாருங்கள். எங்கள் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கிறோம் என்ற ஐயா இராசரத்னம் தெரிவித்தார். 

உடன் பொருட்பாலில் ஓர் அதிகாரத்திற்கு ஒரு குறளாகத் தோவு செய்து அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த நூலை அணியம் செய்தேன். 

தற்போது தமிழகத்திலும் அரசியல் உலகம் அறிவுப்பூர்வமாக இல்லை போதுமான முன்னேற்றத்தை நாடு பெறவும் இல்லை 

சட்டமன்ற உறுப்பினர்கள் என்போர் மக்களின் பிரதிநிதிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் மக்களில் பெரும்பாலோர் மடையர்களாக இருந்தால் மக்களின் பிரதிநிதிகள் மடையர்களின் பிரதிநிதிகளாகத்தானே இருக்க முடியும்? 

அதுதான் இன்றையத் தமிழகத்தின் அரசியல் நிலை. ஆக்கம் கெட்ட நாடு அடிமை மந்திரிகள் 

கல்லார் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது 
இல்லை நிலக்குப் பொறை - 570 

என்கிறது ஒரு குறள். இதன் பொருள் 

முட்டாள்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று மூடர்களால் ஆளப்படும் ஓர் அரசாங்கத்தைப் போல் நிலத்தின் பொறுமையைச் சோதிக்கும் கொடுமையான செயல் வேறில்லை என்பதாகும். 

பொறுமை இழந்த பூமி குலுங்காமல் என்ன செய்யும்? 

சென்னையில் பூமி அதிர்ச்சி என்ற செய்தியால் திருக்குறளை உணர்ந்தவனுக்கு வியப்போ அதிர்ச்சியோ என்படி ஏற்படும்? 

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். நஞ்சை உண்டவன் சாகத்தான் வேண்டும். தவறான முடிவெடுத்தவன் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும். 

மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி 
மறைந்தொழுகும் மாந்தர் பலர் - 278 

என்பது ஒரு குறள். இதன் பொருள் 

மனத்தில் உள்ள அழுக்கை நீக்கினால் மட்டுமே பாவம் நீங்கி இறை அருளையோ, இறை அனுபவத்தையோ பெற முடியும். அதை விட்டுவிட்டு கங்கை, பம்பை, மகாமகக் குளம் போன்று புண்ணியத் துறைகளில் நீராடினால் பாவம் போகும் என்று எண்ணி வீணாகும் பேதையர் உலகில் ஏராளம் என்பதாகும். 

இதையே 

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் 
பொங்கு தண்குமரிப்பெருந்துறை ஆடிலென் 
ஒங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென் 
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே 

என்கிறது தேவாரம். 

தமிழ்நாட்டிலோ, அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களே மகாமகக் குளத்தில் நீராடி மக்ககளைச் சாகடிக்கிறார்கள். மண்சோறு உண்பது, வேப்பிலை கட்டி ஆடுவது, குருவாயூரப்பனுக்கு யானை, வக்ரகாளிக்கு ரத்தம் என்பது போல் அருவருப்பான மூடிச்சடங்குகள் செய்வதில் முன்னோடியாய்த் திகழ்கிறார்கள். 

மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள அறிந்தோ அறியாமலோ ஆட்சியாளர்கள் மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்சிறார்கள். 

எனவே ஓர் அறிவுப்பூர்வமான ஆட்சியாளன் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் நன்கு தெரிந்து கொள்ளவேண்டம். அதையே இந்த நூலில திருக்குறளின் வழி விளக்கியுள்றோம். 

மக்களாட்சித் தத்துவத்தில் யார் வேண்டுமானாலும் ஆட்சியாளனாய் மாறலாம். எனவே எல்லோரும் இதைப் படித்துப் பார்த்துத் தங்களை அணியம் செய்து கொள்ள வேண்டும். நாட்டை அறிவாளிகள் ஆட்சி செய்ய வேண்டும். அதுவே இந்த நூலின் வழி நாம் தெரிவிக்க விரும்பும் செய்தி. 

ந்ன்றியுடன். 

No comments:

Post a Comment