இக்கட்டில் இருந்து வாழ்க்கையைத் தொடங்குவோம் .
1.மனது எப்போதும் எளிதான விசயங்களையே விரும்புகின்றது. சிந்தனை செய்வதற்கும் சிந்தனையின் மூலமாக செயல்களைப் படைப்பதற்கும் தான் அது எப்போதும் தன்னை போட்டுக் கசக்கிக் கொள்ள விரும்புவதில்லை.ஆனால் வெளிச் சூழல் எந்த மனதையும் கசக்கிப் பிழிந்து அதில் இருந்து சாறு எடுக்கப்படாமல் விடுவதில்லை.அதனால் தான் எப்போதும் தனது அனுபவங்களில் இருந்து மனம் ஆனது எளிதில் சிந்தனை செய்யும் சூழல் என்னும் நிலையினையே விரும்புகின்றது.
2.ஒரு வேலை எளிது என்பதற்காக நாம் அதனைச் செய்ய வேண்டாம், அது நமது மனத்திற்கு சரியானது என்னும் போது அந்த வேலையைச் செய்வோம்.ஒரு வேலையோ படிப்போ அல்லது சமூகத் தொடர்போ எதுவாக இருந்தாலும் நமது பழைய அனுபவங்களில் இருந்து நாம் அதனை எதிர் கொள்கின்றோம். அந்த சூழல் நமக்கு பழக்கமான ஒரு சூழல் என்று மனது நம்பும் வரை.பழக்கம் என்றால் ஒரு செயலை நாம் நன்கு கற்றுத் தேர்ந்தும் அதில் அனுபவம் பெற்றும், அந்தச் செயலை முதலில் செய்ய ஆரம்பித்த போது இருந்த கடினங்களும் தவறுகளும் இல்லாமல் செய்வது . மனமானது அந்தக் குறிப்பிட்ட செயலைச் செய்யும் போது வரும் எல்லாவிதமான எதிர்மறையான விசயங்களையும் எதிர் கொள்ள தனது அனுபவங்கள் மூலம் கொள்ளும் நம்பிக்கை எனலாம்.
3.நாம் நமது குறிப்பிட்ட அந்தச் செயலைச் செய்ய ஆரம்பித்த காலகட்டங்களை நினைவு படுத்தி பார்த்தோம் என்றால் அது முதலில் அறியாமையில் இருந்து ஆரம்பிக்கப்படும். கற்றுத்தருபவர் எவரேனும் இருந்தால் அவரிடம் சரணாகதியும் யாரும் கற்றுத் தருபவர்கள் இல்லையென்றால் சூழ்நிலைகளிடம் சரணாகதி நிலைமையும் இருக்கும்.மனது அந்த புதிய செயலைச் செய்யும் போது வரும் அனுபவங்களை எப்படியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வதில் எதிர்நிலை காட்டியே தீரும்.
4.நாம் ஈடுபட்டுள்ள் செயலில் நமக்கு ஆர்வமும் முயற்சியும் எவ்வளவு தூரம் இருக்குமோ அவ்வளவு தூரத்திற்கு எதிர்நிலையின் தாக்கம் குறையும்.இருந்தாலும் மனமானது இந்த எதிர்நிலையினையினை எதிர் கொள்ள தன்னிடம் உள்ள ஆர்வத்தினையும் சுற்று சூழலையும் கணக்கிடுகின்றது.இந்தக் கணக்கீட்டின் போது கற்றுத் தேறல் என்பதில் ஒரு இக்கட்டு நிலை தோன்றும் .
5.இந்த இக்கட்டு நிலையின் போது நாம் அந்தக் குறிப்பிட்ட செயலையோ படிப்பினையோ வேலையினையோ நமது பாணியில் செய்வது எப்படி என்பதையும் அதில் எப்படி விளைவுகளை விளைவிப்பது என்பதனையும் கற்றுக் கொள்கின்றோம்.பின்பு அதே போன்ற சூழல் வரும் போது நாம் ஏற்கனவே இக்கட்டில் இருந்து உருவாக்கிக் கொண்ட பாடங்களில் இருந்து எளிதாக நமது வேலையை தொடங்குகின்றோம் .நாம் அந்தக் குறிப்பிட்ட வேலையிலோ செயலிலோ தனித்திறமை பெற்றவர்களாக வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். நாம் அந்தக் குறிப்பிட்ட செயலிலோ வேலையிலோ தனித்தன்மை பெற்றவர்கள் என்பதை உணரும் வரை .
6.நம்மால் இன்று வெற்றியாளர்கள் என்றும் சிந்தனையாளர்கள் என்றும் உணரப்படுபவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் பழங்கால அறிவியல் ஆன்மீக சிந்தனையாளர்களில் இருந்து இன்றைய தொழில் உலகின் வெற்றியாளர்கள் வரை, அணைவரும் தங்கள் வாழ்க்கைக்கான சக்தியையும் மன உறுதிகளையும் இக்கட்டில் இருந்த போது தாங்கள் உணர்ந்த தங்கள் மனதில் வளர்த்த வைராக்கியங்கள் என்னும் மன உறுதியில் இருந்து தான் தொடங்கியிருக்கின்றார்கள்.இனிமேல் இந்த சூழலில் இருந்து தப்பிக்க என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை என்னும் போது மனது தனித்திறமையை உருவாக்குகின்றது.
7.இந்த இக்கட்டு என்னும் நிலையினை அடைய அவர்களது அதற்கு முந்தைய சூழ்நிலைகளுடனான போராட்டங்கள் எதுவும் நமது கண்ணுக்குத் தெரியாது .நாம் நமது வாழ்க்கையின் மன உறுதிகளை இக்கட்டில் இருந்து பெறலாம்.ஆனால் இக்கட்டான நிலைக்கு நாம் நம்மைக் கொண்டு செல்ல வேண்டும்.அது எப்படி ?எப்போதும் நமது மனது சுகமான சூழ்நிலையில் இருக்கின்றது என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும்.
8.பழைய அனுபவங்கள் மூலமான பழக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும் இக்கட்டான சூழ்நிலை நமது வாழ்வில் அதுவாகவே மற்றவர்களது குறுக்கீடு மூலமாக தோன்றுவது என்பது ஒரு வகை .அது மட்டுமல்லாமல் நாமாகவே அப்படிப்பட்ட இக்கட்டுகளை மன உறுதிகளை வளர்ப்பதற்காக உண்டு செய்வது என்பது மற்றொரு வகை.எப்போதும் எந்த சூழ்நிலையாவது நமக்கு மனதில் பயத்தையும் நம்பிக்கையின்மையையும் வசதியின்மையையும் உருவாக்கினால் அது நல்லது நாம் இக்கட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்.
9.நமது கடந்தகால அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளுக்குள் நாம் செல்லப் போகின்றோம் என்றால் அதனை வரவேற்க நமது மனநிலையைத் தயாராக வைப்போம்.அந்த சூழ்நிலையை விட்டு வெளியேற முயற்சி செய்வது என்பது இயற்கை நமக்கு சொல்லிக் கொடுக்க இருக்கும் பாடசாலையை விட்டு வெளியேறுவது போலத்தான்.அதனால் இக்கட்டுக்கான பாடசாலையில் பாடங்களை மனப்பூர்வமாக திறந்த மனதுடன் படிப்போம்.அப்படிப்பட்ட பாடசாலையில் நாம் பாடம் படிக்கக்கூடிய நிலையில் இல்லையென்றால் அந்த பாடசாலையை நாமாகத் தேடிக் கண்டுபிடித்து சேருவோம்.
10.இக்கட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டவர்களின் வரலாறுகளையும் வழ்க்கையையும் சொல்லுவதால் இதனை விளக்குவது என்பது இன்னும் எளிதாக இருக்கலாம், ஆனால் அந்த வரலாற்றின் முடிவுகள் இந்தப் படிப்பினைகள் தான்.இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதும் கூட நமக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏதும் ஏற்பட்டதாக உணர்ந்தால் நல்லது இன்னும் ஒரு படிப்பினையை நாம் கற்றுக் கொண்டோம்.இந்த இக்கட்டில் இருந்து கூட உங்களது வாழ்க்கையைத் தொடங்கலாம் வெற்றியை நோக்கி .அந்த வெற்றியும் கூட உங்களுக்கு நீண்ட நாட்களுக்குத் தேவையில்லை இன்னொரு இக்கட்டைத்தான் நீங்கள் உருவாக்கப் போகின்றீர்களே!
No comments:
Post a Comment