இந்தப் பதிவு உங்களுக்காக
1.எப்படி சிந்தித்தாலும் மனதிற்குத் தெளிவு பிறக்க மறுக்கின்றது. சிந்தனை ஒட்டத்தில் மயக்க நிலை தோன்றுகின்றது.சிந்தனைகளையே உணர்வுப் பாதையாக்கி வேகத்தின் உச்சத்தைக் குறிக்கும் மனோவேகத்திற்குள் மனோவேகம் கூட்டி மனதிற்குள் பயணம் மேற்கொண்டு ஏதாவது ஒரு எண்ணத்தைப் பிடித்து அப்படிப் பிடித்த எண்ணத்தை வைத்து அந்த எண்ணத்துடன் தொடர்பு உள்ள இன்னொரு எண்ணத்தைப் பிடித்து அதனைப் புரிந்தும் புரியாமலும் எழுத்துக்களாக மாற்றி அதனைக் கண்பார்வைக்குக் கொண்டு வருவதற்குள் பிரசவ வேதனையாகத்தான் இருக்கின்றது.
2.சிந்தனைகளின் தாக்கமும் தனி நபர் நிலைநிறுத்தலுக்கான வாழ்க்கையின் போராட்டமும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது தினம் தினம் புதுப்புது போராட்ட நிகழ்வுகள்.அதன் ஊடே வந்து போகும் மனிதர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளப் போடும் பல வேசங்கள் பல அவதாரங்கள்.எல்லோரும் மற்றவர்களினூடே தான் தங்களை நிலை நிறுத்தப் பாடுபடுகின்றார்கள் ஏன் என்று தெரியாமலேயே.
3.எல்லா சமயங்களிலும் எல்லோரும் விரும்பும் வண்ணம் எல்லோராலும் நடக்க முடிவதில்லை.ஒருவரது துன்பத்தில் தான் மற்ரொருவருக்கு இன்பம் ஒரு மனிதனில் தோன்றும் எண்ணத்தின் இறப்பால் தான் மற்றவருக்கு வாழ்வு .இயற்கையின் இந்த விளையாட்டுப் புரிந்தும் புரியாமலும். யாருக்காக இந்த வாழ்வு ,யாருக்காக இந்த நாடகம் ,இயற்கையின் உண்மையான நோக்கம் தான் என்ன?என்ற மயக்கத்தின் வழியே வாழ்க்கைப் பாதைகள் போதைகளோடு அதில் நமது பயணங்கள் .
4.நோக்கம் எதுவும் இல்லாமல் செயல்கள் எதுவும் இல்லை,தத்துவங்கள் இல்லாமல் பொருட்கள் இல்லை . செயல்கள் எதுவும் தானகவோ தன்னிச்சையாகவோ எந்த ஒரு தூண்டுதலும் நோக்கமும் இல்லாமல் வனாந்தரமாக நடை பெறுவதில்லை. யாருடைய மன உணவுக்காக இந்த செயல் நாடகங்கள் .இதில் பலிகெடாக்களின் துயரமும் யாருக்காக ?மற்றவர்களின் மன உணவும் அதன் இறப்பும் அதனை வெளிப்படுத்தும் நபர்களின் மூலமாகக் கிடையாது அவர்களுக்காகவும் கிடையாது.சூத்திரதாரி யார் என்று புரிந்தும் புரியாமலும் சூத்திரத்திற்குள்ளாகுபவன் மயக்கத்தோடும் கலக்கத்தோடும் ,சூத்திரமோ என்றும் நிலையாக மயக்கமும் கலக்கமும் இல்லாமல்.
5.எந்த நோக்கமும் இல்லாமல் எழுதப்பட்டது நோக்கம் இல்லாத நபர்களால் படிக்கப்பட்டால் தான் அதன் நோக்கமின்மை தெரிய வரும்.நோக்கமின்மையே தான் அதன் நோக்கமாக இருக்க முடியுமோ. மொழியாலும் மனதின் சிந்தனையாலும் ஒவ்வொருவருக்கும் தன்னை உணர்வதில் மயக்கமும் கலக்கமும் .மொழிக்கும் அதன் வழியில் தோன்றும் சிந்தனைக்கும் மனிதர்களின் விருப்பங்களை முழுவதும் நிறைவேற்ற முழு ஆற்றல் தான் இருக்கின்றதா? வாழ்க்கையின் உயிர் வாழ்வு நிலை நிறுத்தல்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தற்போதைய இந்திரியங்களும் உறுப்புக்களும் நிலைநிறுத்தல்களுக்குப் போதவில்லை.
6.இயல்பான இருப்புக்கான தற்போதைய சிந்தனை விருப்புகளை அடைவதற்கு போதுமானதாக இல்லாத நிலையில் இவற்றை மறு உருவாக்கலுக்காக எங்கே விண்ணப்பிப்பது யாரிடம் சிந்தனை செய்து அடைவது ?.எங்கே நாம் விரும்பும்படியான கூடுதல் இந்திரியங்களின் இருப்பைக் காணுவது கண்டால் அதனை எப்படி உடலில் பூணுவது.ஐம்பூதங்களால் தான் இந்திரியங்கள் ஐந்தா?அல்லது இந்திரியங்கள் ஐந்தால் தான் ஐம் பூதங்களா?
7.பொருளை உருவாக்குவதிலும் சேர்த்து வைப்பதிலும் தான் இன்பம் அது தான் வாழ்க்கை லட்சியம் என்று சேர்த்துவைப்பதை மட்டும் இலக்காகக் கொண்ட சமூகத்தைக் காண்கின்ற போது பாவம் அதன் பழைய இல்லாமைகளுக்கான ஏக்கங்களும் தற்போதைய இருத்தலை நிலை நிறுத்துவதற்கான கவலைகளும் புலப்படாமல் இல்லை.தனது இருப்பையும் தனக்கு முன் உள்ள காற்று ,அகச்சிவப்பு ,புற ஊதா கதிர்கள் காந்தப்புலன்கள் ஆகியவற்றைப் பட்டவர்த்தமாக,கண்கள் வழியாக உணரக் கூடிய மூளையும் அதனை உணர்த்தக் கூடிய மொழியையும் யார் படைப்பது .
8.ஐம்பூதங்கள் இருப்பில் இருப்பது இயற்கையின் இரவலில் தனக்கென்று சொந்த ஒரு உருவம் கூட இல்லாமல் எப்போதும் நிலையாகத் தனது தனித்தன்மையுடன் இல்லாமல் மற்றொன்றுடன் கூடி அவ்வப்போது வேறு வேறு உருவங்களும் தன்மைகளும் எடுத்தும் கண்ணுக்குத் தெரிந்ததாகவும் தெரியாததாகவும் ,உணரக்கூடிய அளவில் உணரமுடியாமல்,மயக்கத்தோடும் மயக்கம் இல்லாமலும் ,கலக்கத்தோடும் கலக்கம் இல்லாமலும் .
9.இந்த உடம்பில் மேலும் ஒரு இந்திரியத்தைப் பூணுவதற்கு இடம் இல்லாமலா இருக்கின்றது .இயற்கையின் படைத்தலுக்கான முழு ஆற்றலான மொழியை யாரவது கற்றுக் கொடுக்க முடியுமா?.இயற்கை அன்னையே உனது காலம் என்னும் சிந்தனையை உணர என்ன விதமான அறிவு தேவை ?நீயும் எங்களைப் போல் இருந்து உனது போராட்டத்திற்குப் பின்புதான் உமக்கு இயற்கை என்னும் பட்டம் வழங்கப்பட்டதா?இந்தப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் உமக்குள் இத்தனை நாடகங்களுமா
No comments:
Post a Comment