Wednesday, January 1, 2014

காரியக் கிறுக்கர்களின் முகமூடி

காரியக் கிறுக்கர்களின் முகமூடி .

1.உங்களது சுய ரூபத்தை எங்கும் காட்டி  விடாதீர்கள்.மனிதர்கள் உங்களைப் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.தங்களது வாழ்வின் வளர்ச்சிக்கு உங்களை உணவாக்கி விடுவார்கள்.நமது காரியங்களைச் செய்யும் போது மனிதர்களை அளந்து வைத்துத்தான் செய்கின்றோம்.ஆனால் அளவைக்கு அகப்படாத  மனிதர்களும் தவறான அளவைகளை நம்மிடம் காட்டும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

2.மனிதர்களின் எண்ணங்களை அளவிடும் அளவுகோலை நம்முடன் எப்போதும் வைத்திருப்போம்.நாம் எந்த வகை என்று நமக்கு நாமே அளவிட்டுக் கொள்வோம்.மற்றவர்கள் என்ன வகையில் தங்களை நம் முன் காட்டுகின்றார்கள் என்பதனையும் அளவிடுவோம்.மனிதர்கள் தங்களது காரியத்தைச் செய்ய ஒவ்வொரு பாவணைகளை ஒவ்வொரு சூழலிலும் காட்ட வேண்டியிருக்கின்றது.இதற்காக தங்களது  ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒவ்வொரு முகமூடிகளை  இந்த அளவு கோலின் படி செய்ய வேண்டியிருக்கின்றது  .

3.புறக்காட்சிகள் என்னும் முகமூடிதான்   இயற்கையின் உண்மையான சொரூபத்தை  தன்னுள் மறைத்து வைத்தும் அதனை யாரும் எளிதில் உணர முடியாமல் வைத்திருக்கின்றது,ஆன்மாவை மூடி வைத்திருக்கும் நமது  உடல் போல.நமது  இருதயத்தையும்  மனதையும்  மூடி வைக்க ஒரு முகமூடி தயார் செய்து வையுங்கள்.நீங்கள் யார் தான் என்பது எல்லோருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.அன்பு  மட்டுமே இந்த முகமூடியை அகற்றிப் பார்க்கட்டும் .இந்த முகமூடி இல்லாமல்  முற்றிலும்   நாம் வாழ முடியாது  அதே நேரத்தில்  இந்த முகமூடியை அணிந்து கொண்டு  முழுவதும் அதனுள்ளேயே நாம் இருக்கவும் முடியாது.

4.இப்படிப்பட்ட முகமூடிகள் அவர் ரொம்பக் கோபக்காரர்,ரொம்பவும் அன்பானவர் ,சுயநலமில்லாதவர்,சுயநலமிக்கவர் ,மிகுந்த திறமைசாலி இப்படி ஒவ்வொரு ரகமாக தயார் செய்து உங்கள் பையில் தயாராக வைத்திருங்கள் .வேண்டும் போது பயன் படுத்துவதற்காக.சில நேரங்களில் அசடு என்ற முகமூடியைக் கூட பயன்படுத்துங்கள் உங்களுக்கு அது நண்மை செய்யும் என்றிருக்கும் போது .அதனைத்தான் வழக்கு மொழியில் சொல்லுவார்கள் இவன் காரியக் கிறுக்கன் என்று.கிறுக்குத் தனமான முகமூடியைப் போட்டு தனது காரியங்களைச் சாதிக்கும் புத்திசாலிகள் இவர்கள்.


5.நமது  மேல்  அதிகாரிகளிடம்   இவன் திறமையானவன் தான் ஆனால் நமக்குக் கட்டுப்பட்டு இருக்கும்  நம்மை விடத் திறமை  இல்லாதவன் என்னும்  முகமூடியைக் காட்டுங்கள் .இப்படிஒவ்வொரு  சூழ்நிலைகளிலும்  நமக்குச்  சாதகமாக இருக்கக் கூடிய முகமூடிகளை தயாரிப்போம். இந்த முக மூடியை ஒருவர் அகற்றிப் பார்ப்பதற்கு விரும்பினால் அதில் காண்பதற்கு சதைகளைத் தவிர கூடுதலாக பொருட்களை வையுங்கள்.அந்தப் பொருட்கள் என்னவென்று  நீங்களே தீர்மாணியுங்கள் .அதுவும் ஒரு முகமூடிதான் என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

6.அறிவாளிகள் முகமூடிகளைச் செய்யும் போது அதன் வாய்ப் பகதியை மட்டும்  தங்கத்தில் அமைக்கின்றார்கள். சில சமயம் நாம் அணிந்திருக்கும் முகமூடிகளுக்கு உள்ளேயே நாம் தான் இருக்கின்றோம் என்று நாமே மறந்து விடக்கூடாது  ,எப்போதும்  நாம் சுதாரிப்பு உணர்வில் இருக்கவேண்டும் .நாம் அணிந்திருக்கும் முகமூடிகள் மற்றவர்களுக்காகத்தனே தவிர  நமக்கில்லை.

7.ஒரு மனிதனுக்கு அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்  உண்மையான  அவன்  முகத்தை நாம் காணலாம்.அது போல் ஒரு மனிதனுக்கு அவனது  முகத்தை மறைக்கக் கூடிய ஒரு முகமூடியைக் கொடுத்துப் பாருங்கள்,அவன்  அப்போது   தனது உண்மையான சொரூபத்தைக் காட்டுவான்.அப்படி என்றால் எந்தெந்த மனிதர்கள் எந்தெந்த முகமூடியை அணிந்து எந்த உண்மையான சொரூபத்தைக் யாரிடம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கணக்கிடுங்கள்.

8.உங்களை யாரும் இப்படிக் கணக்கிட முடியாது .நீங்கள் தான் முகமூடிக்கு ஒரு முகமூடியைத் தயார் செய்து வைத்திருக்கின்றீர்களே.நாம் நமது வாழ்வில் பெரும்பாலும் மனிதர்களாக வாழ்ந்து   தன்னைத்தானே  அறிந்து  கொள்ள   வாழ்க்கைப்   பயணத்தை   மேற்கொள்ளுகின்றோம் என்றால்  தவறு   உண்மையில் நாம் தன்னை அறிபவர்களாக   இருந்து மனிதர்கள்  என்று நமது வாழ்க்கைப்  பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.

9.அவன் இறந்து விட்டான் அவனது முகமூடியைக் கழற்றுங்கள் சுடுகாட்டிற்காவது அவனது உண்மையான முகத்தோடு செல்லட்டும் .இதனை ஒவ்வொருவரும் தங்கள் முகமூடியைக் கழற்றிவிட்டு சொல்லட்டும் .எனது முகமூடியைக் கழற்றிவிட்டு சொன்ன இந்தக் கருத்தை நீங்கள்  உங்கள் முகமூடியைக் கழற்றிவிட்டு படிக்க வேண்டாம்.முகமூடிகள் என்பது மற்றவர்களுக்குக் காட்டத் தானே தவிர  நாம்  சிந்திக்கும் போது முகமூடிகள் தேவையில்லை.

No comments:

Post a Comment