வாயுள்ள பிள்ளை பிழைக்கும்(பேச்சுக்கலை)
1.பேச்சுக்கலையில் கையாளக்கூடிய பல நுட்பங்களை இந்தத் தொடர்பதிவின் மூலமாகப் பார்த்து வருகின்றோம்.ஒரு பேச்சுக்கான கருத்தை பேப்பரில் எழுதி அதனைப் பார்த்துப் பேசுவதற்கும் சிறு குறிப்பை மட்டும் அவ்வப்போது பார்த்து பேசுவதற்கும் , எந்தக் குறிப்பும் இல்லாமல் மடை திறாந்தாற்போல பேசுவதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கின்றது .பார்த்துப் பேசும் பேச்சில் உணர்வுகள்ஏற்றிப்பேசினாலும்அதுகேட்பவரைப்பெரிதும்பாதிப்பதில்லை.
2.பேச்சுக்கலையின் மற்றொரு அம்சம் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வது .பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் மாலை வேலைகளில் தான் கூட்டப்பட வேண்டும் .இந்த சமயத்தில் தான் தனி மனிதனின் சிந்தனை அறிவு ,விவாத அறிவு குறைந்து இருக்கும்.மேடை அமைப்பில் இருந்து அது அலங்கரிக்கப்படும் விதம் ஒலி பெருக்கிகள் வண்ண விளக்குகள் ஆகியவற்றின் அமைப்பு சாதரண மனிதனுக்கு பிரமிப்பை ஏற்படுத்துவதாக அமைக்கப்படல் வேண்டும்.
3.ஒரு கருத்தை ஒரு தனி மனிதனிடம் சாதாரணமாக நேரடியாகச் சொல்லுவதைவிட அவனை ஒரு பெரிய கூட்டத்தில் அங்கத்தினர் ஆக்கி சொல்லப்படும் போது அவனால் அதனை எளிதில் மறுக்க முடியாது.கூட்டத்தில் இருக்கும் போது அவனது சாதாரண நிலையில் உள்ள சிந்தனைத் திறன் குறைந்து இருக்கும். அவன் மனது பிரமிப்பிலும் ஒரு மிகப் பெரிய கூட்டத்தில் தானும் ஒரு உறுப்பினர் ,இந்தக் கூட்டம் எனது விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றது என்ற எண்ணத்தில் இருக்கும் போது அவன் மிக எளிதாக மூளைச் சலவைக்கும் ,கருத்தேற்றத்திற்கும் தன்னைத் தயார் செய்து ஒரு நெகிழ்ச்சி நிலையில் இருக்கின்றான்.
4.ஒரு சிறந்த பேச்சாளர் கூட்டத்தினரைத் திருப்தி செய்து எப்படி நமது கருத்தையும் எண்ணத்தையும் கேட்பவரது கருத்தாகவும் எண்ணமாகவும் பிரதிபலிக்க வைப்பது என்பதை அறிந்து இருக்க வேண்டும்.இதனைத்தான் உலகம் முழுவதும் சமூக மாற்றம் என்னும் பெயரில் காலம் காலமாக செயல் படுத்தி வருகின்றார்கள்.கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களைத் தாங்கள் ஒரு தனிப்பட்ட நபரல்ல ஒரு பெரிய கூட்டத்தின் ,சமுத்திரத்தின் ஒரு பகுதி.நமது விருப்பங்களைப் பிரதிபலிக்க ஒரு தலைவர் இருக்கின்றார் என்று பிரமிப்புக் கொள்ளச் செய்வதாக இருக்க வேண்டும்.
5.பேச்சாளர் பேசுவது எல்லாம் எனது விருப்பத்தைத்தான், அவர் பேசுவது நான் பேசுவது போலத் தான் .நான் எனக்காக அவரது கட்டளையை நிறைவேற்றி மன நிறைவடைவேன்.இந்த எண்ணத்தை பார்வையாளர் மனதில் விளைவித்து அறுவடை செய்வது தான் சிறந்த பேச்சாளர் .இந்த பண்பைத் தெரிந்தோ தெரியாமலோ வளர்த்துக் கொண்டவர்களால் தான் உலக வரலாற்றில் பல பக்கங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.பல அரசியல் சிந்தனையாளர்களுக்கும் அரசியல் மாணவர்களுக்கும் இது பாடமாக உள்ளது.
6.ஒவ்வொரு சிறந்த பேச்சாளரும் ஒரு சராசரியான பேச்சாளராகத்தான் தங்களது மேடைப் பேச்சின் பயணத்தைத் தொடங்கி இருக்கின்றார்கள்.பேச்சுக்கலையில் சிறக்க முதல் படிக்கட்டு பல வகைகளில் பல மேடைகளில் பேசிப் பாருங்கள்,பார்வையாளர்களின் மனதை ஆள முயற்சி செய்யுங்கள் . உங்கள் பேச்சு எப்போது பார்வையாளார்களைத் தொட்டது அதனை எப்படி நீங்கள் உணர்ந்தீர்கள் இதனை ஒவ்வொரு முறையும் கணித்திடுங்கள். உங்களது பேச்சுக்கான தனித்தன்மையை நீங்களாகவே இதில் இருந்து உருவாக்குங்கள்.
7.உங்கள் பேச்சுக்கான வார்த்தைகளை வானத்தில் இருந்து பிடிக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துங்கள்.நீங்கள் பார்வையாளருக்கு ஏதோ ஒன்றைப் பிரகடனம் செய்வதற்காக யாரோ உங்களுக்கு முழு அதிகாரமும் கொடுத்தது போல உங்களது வார்த்தைகள் இருக்கட்டும் .யாருமே படித்தறியாத புதுமையான உவமைகளைக் கையாளுங்கள்.ஒவ்வொரு கூட்டத்திலும் புதுப் புது கருத்துக்களைப் பேசுங்கள்.
8.உங்களது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் அதனை பயப்படாமல் பிரகடனம் செய்யுங்கள்.உங்களுக்கு எல்லா அதிகாரமும் இந்த பிரபஞ்சத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற நம்பிக்கையில், தொனியில் பேசுங்கள்.பல மேடைகளில் அல்லது தருணங்களில் நீங்கள் பேசும் வாய்ப்புகள் இருக்கும் போது நீங்கள் பேச இருக்கும் பேச்சுச்சூழ்நிலை ஏற்கனவே வேறு மேடையில் உங்களால் பேசப்பட்ட கருத்தாக இருந்தால் வேறு நுட்பத்தைக் கடை பிடியுங்கள்.
9.அந்த நுட்பம் இது தான் , தற்போது நீங்கள் பேச உள்ள கூட்டத்தில் உள்ள பார்வையாளர்கள் , மற்றும் உங்களுடன் பேசும் சக பேச்சாளார்கள் , ஏற்பாடு செய்த நபர்கள், எல்லோரும் புதியவர்களாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஏற்கனவே பேசிய கருத்தைப் பேசிடுங்கள்.ஏற்கனவே நாம் பேசியதைக் கேட்ட நபர்களுக்கு அது மனக்கிளர்ச்சியை உண்டு செய்யாது .பேச்சாளரின் திறமை மீது சந்தேகத்தையும் சலிப்பையும் ஏற்படுத்தும்.
10.பேச்சுக்கலையை எல்லோரும் அறிந்து கொள்ளமுடியாத எளிதில் கற்றுக் கொள்ள முடியாத ஒரு மறைக்கப்பட்ட கலை என்று கூடச் சொல்லலாம்.பேச்சாளரின் பேச்சையும் உடல் அசைவையும் வைத்து கேட்பவரின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயல் தான் பேச்சு என்று சொல்லுவார்கள்.
11.பேச்சை கேட்பவருக்கு அது சந்தோசத்தையும் மனக்கிளர்ச்சியையும் கேட்டவரின் மனதில் பேச்சு ஒரு குறிப்பிட்ட காலம் நிலைக்கத்தக்க எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும். பேச்சுக்கலையை நன்றாகக் கற்றுத் தேர்ந்த பேச்சாளர் அவரது பேச்சைக் கேட்பவர்களிடம் இருந்து சக்தியை.ஆற்றலை ஒரு அலையாக, ஆறாக பிராவகமாக தனக்காக எடுத்து செயல் ஆற்றும் நிலை தான் பேச்சுக்கலையின் வெற்றி .
பேச்சின் நோக்கம் உண்மையை பேசுவது என்பது இல்லை நாம் பேசுவதை உண்மை என்று ஏற்றுக் கொள்ள வைப்பது தான் பேச்சின் வெற்றி.
No comments:
Post a Comment