பழி — சுயநலம் — சதி – துரோகம் — ஏமாற்றுதல்
பழி
நம் புலன் அறியாது உள்ளே செல்லும் பொருள் ஒன்றும் இல்லை
நம் நா அறியாது வெளியே செல்லும் சொல் எதுவும் உண்டோ
நல்லவர் காது கேட்ட வதந்தியோ கட்டாந்தரையில் போட்ட நெருப்பாகும்
கயவர் காதில் போட்ட வதந்தி குப்பையில் போட்ட காட்டுத் தீயாகும்
நல்ல செய்திகள் குளத்து நீரில் மிதக்கும் இலை போல தயங்கி நகரும்
கெட்ட செய்திகள் வானில் காற்றில் பறக்கும் இலை போல பறந்து பரவும்
சுற்றம் என்பது நாம் வாழும் போது வந்து சேர்வது
குற்றம் எனப்து நாம் தாழும் போது வந்து சேர்வது
அறிஞரை இகழ்ந்தால் நாம் நகைக்கு இடமாவோம்
வறிஞரை இகழ்ந்தால் நாம் பகைக்கு இடமாவோம்
நமது வெற்றி கண்டு நாம் கொள்வது விந்தை
பிறர் வெற்றி கண்டு நாம் சொல்வது நிந்தை
வாள் அது உயிரை நீக்கி கொல்லும்
சொல் அது உயிரை நீக்காது கொல்லும்
பிறரை தாழ்த்தி நீ உயர முயற்சி செய்யாதே
பிறரை வீழ்த்தி நீ வாழ வழி தேடாதே
வரம்பே இல்லாதது நாக்கு அது தாழ்த்துயது பல கோடி
எலும்பே இல்லாதது நாக்கு அது வீழ்த்தியதோ பல கோடி
முகத்துக்கு முன்னே பாராட்டுவதும் முதுக்கு பின்னே குத்துவதும் துர்குணமே
அகத்துக்கு உள்ளே சீராட்டுவதும் முதுகுக்கு பின்னே பாராட்டுவதும் நற்பண்பே
சுயநலம்
சுய நலம் ஒரு கலர் கண்ணாடி
சுய நலம் தேடும் அடுத்தவர் சோகத்திலும்
பொது நலமென்பது பிறரை வாழ வைத்து நாமும் வாழ்வது
சுய நலமென்பது பிறரை வீழவைத்து நாமும் வீழ்வது
கணக்கு புத்தகம் போல வாழ்வைகசப்பாக்குபவர் கஞ்சர்
காதல் நாடகம் போல வாழ்வை சுவையாக்குபவர் கவிஞர்
நாலு பேருக்கு நல்லது செய்வேன் என்று சொன்னாதே அந்த
நாலு பேரும் தன் குழந்தை என்று சொன்னாரில்லையே
கலைஞர்கள் கைதட்டும் மக்களுக்காக ஆடுகிறார்கள்
தலைவர்கள் தான் பெற்ற மக்களுக்காக ஆடுகிறார்கள்
இருளுடைய நெஞ்சினர் ஈரமில்லாத உள்ளத்தினர்
தன்னலம் இன்றிப் பின் ஒன்று அறியாதவர்
குருடராய் வாழ்ந்து குணமொன்றும் இல்லாத வாழ்வும் வாழ்வல்ல
திருடராய் திரிந்து பணமெல்லாம் சேர்த்த வாழ்வும் தாழ்வே
உணவைப் பார்த்தால் உறவைக் கூப்பிடும் கண்ணியவான்கள் காகங்கள்
புதையலைப் பார்த்தால் உடனே புதைக்கும் புண்னியவான்கள் மனிதர்கள்
கொற்கை பாண்டியர்கள் பொற்கையானது நீதியை காப்பதற்கு
வெறுங்கை ஆண்டியர்கள் பெருங்கையானது நீதியை சேர்ப்பதற்கு
கொடியில் பூத்த மலரென தனிமையில் மிளிரும் தலைவர்கள்
மரத்தில் தொங்கும் மந்தியென பதவியில் தொங்கும் சில மந்திரிகள
சதி
மறைவாய் மறைந்து சதியாலே ஊரை அழிப்பார் எத்தரே
நிறைவாய் நிமிர்ந்து மதியாலே உலகை காப்பார் உத்தமரே
ஊரை பழிக்கும் தீ நாக்குக்கு உறவென்று யாருமில்லை
ஊரை அழிக்கும் தீவிர வாதிக்கு நட்பென்று யாருமில்லை
பூட்டை உடைத்து வீட்டை கொள்ளையடித்தால் சிறைச்சாலை
அறிவை மயக்கி கற்பை கொள்ளையடிப்பது தர்ம சாலை
வியாபாரத்தில் விபசாரத்தில் கொள்ளையடித்தால் வழக்கு மட்டுமே போடுவார்
அரசியலில் ஆன்மீகத்தில் கொள்ளையடித்தால் வழக்கு மட்டுமே போடுவார்
வழக்கு தவறியதற்காக நெஞ்சு வெடித்து மாய்ந்தார் அரசர்
வழக்கு போட்டதற்காக நாட்டை வெடித்து மாய்க்கிறார் தலைவர்
பெரியபெரிய கோயிலாக கட்டினார் சிவன் கோவிலுக்காக
பெரிய பெரிய மாளிகையாக கட்டுகிறார் சின்ன வீட்டுக்காக
உழவரோ விதைகளை புதைக்க குழி தோண்டுகிறார்
கயவரோ பாவங்களை மறைக்க குழி தோண்டுகிறார்
ஆனையை வீழ்த்த அகலமான குழியைவெட்டி வைப்பார்
அறிஞனை வீழ்த்த அழகான விழியை அனுப்பி வைப்பார்
சூதும் சூழ்ச்சியும் பொய்யும் புறமும் செய்து பெற்ற பதவியும் தற்கொலையே
பழியும் பாவமும் புரட்டும் செய்து பெற்ற பணமும் தற்கொலையே
முதுகுக்கு பின்னே தூற்றிப் பேசுபவர்கள் பகைவர்கள்
முகத்துக்கு முன்னே போற்றிப் பேசுபவர்கள் பெரும்பகைவர்கள்
துரோகம்
கொண்ட துணையை கைவிட்டு இணைமாறுவது விலங்குகள் பழக்கம்
கொண்ட கொள்கையை கைவிட்டு அணிமாறுவது அரசியலில் சகஜம்
வேரிலே பிடிப்பில்லாத வெட்டி மரங்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கும்
கொள்கையில்லே பிடிப்பில்லாத கோமாளிகள் கால வெள்ளத்தில் மூழ்குவார்
புகைக்குள்ளே நெருப்பும் புழுதிக்கு முன்னே இயக்கமும் இருக்கிறது
புரட்சிக்குள்ளே நெருப்பும் புயலுக்கு முன்னே அமைதியும் இருக்கிறது
தேளின் வாலை விட வலிதரும் விஷமிகளின் துடுக்கான வார்த்தை
பாம்பின் பல்லைவிட விடம் தரும் நண்பர்களின் துரோக வார்த்தை
உடை மாற்றும் நொடியென கொள்கையை மாற்றுகிறார் அரசியலில்
கடைவிற்கும் சரக்கென கொண்டவனை மாற்றுகிறார் சரச இயலில்
அறிஞரோ மரங்களை வளர்க்க குழிதோண்டுகிறார்
கயவரோ நண்பரை புதைக்க பழி தோண்டுகிறார்
பாலும் கள்ளும் வெண்மையே பருகும் போது தெரியும் உண்மையே
பகையும் நட்பும் புன்னகையே பழகும் போது புரியும் நன்மையே
வேர்க்கின்ற உடலும் ஆர்க்கின்ற எந்திரமும் உழைப்பின் சிகரங்கள்
தூர்க்கின்ற குணமும் தகர்க்கின்ற தந்திரமும் கயமையின் வடிவங்கள்
ஏழைக்காக எதுவும் செய்வார்கள்
ஏழ்மையை போக்குவரத்தை தவிர
காதலிக்காக எதுவும் செய்வார்கள்
உண்மையாக காதலிப்பதைத் தவிர
ஏமாற்றுதல்
நேரம் குறைவாய் இருக்கிறது என பாதையை மாற்றுபவன் குழியில் வீழ்வான்
லாபம் குறைவாய் இருக்கிறது என நீதியை மாற்றுபவன் படு குழியில் வீழ்வான்
நன்மை செய்த நண்பரை நடு ஆற்றில் கைவிடுதல் வஞ்சகம்
உண்மையாய் உழைத்த ஊழியருக்கு உதவாதது நயவஞ்சகம்
கொட்டிக் கிடக்கும் குப்பையைக் கிளறுபவன் அவமானப் பித்தன்
மறந்து கிடக்கும் பகையைக் கிளறுபவன் அதிகார பித்தன்
ஒருபிரச்னைக்கு இரு தீர்வுகளை கண்டுபிடிப்பவர் அறிவாளி
ஒரு தீர்வுக்கு இரு பிரச்சனைகளை கண்டுபிடிப்பவர் அரசியல்வாதி
உடலை விற்பவளின் உதட்டின் சிவப்பு சாயமும் நஞ்சாகும்
ஊழலை விற்பவனின் உதட்டின் இனிப்பு மொழியும் நஞ்சாகும்
கசாப்பு கடைக்காரன் காருண்யமும் வியாபாரியின் நேர்மையும் ஒன்றே
காம விகாரனின் இரக்கமும் கருமியின் தாராளமும் ஒன்றே
அரண்டு போனவர்களை அரட்டி வைப்பவன் வஞ்சகன்
வறண்டு போனவர்களையும் சுரண்டி வாழ்பவன் நயவஞ்சகன்
கொள்ளையடிப்பவரை கொள்ளையடிப்பவன் சமூக காவலர்
பிச்சையெடுப்பவரை கொள்ளையடிப்பவர் சமூக சேவகர்
மணம் செய்வேன் என்று வாக்குறுதி தந்து
இன்பமடைந்து ஏமாற்றுபவர் காமுகர்
மலர்ச்சி செய்வேன் என்று வாக்குறுதி தந்து
பதவிடைந்து ஏமாற்றுபவர் கயவர்
துஞ்சுபவர்கள் தூங்கும் வரை
தூற்றுபவர்கள் தூற்றிக் கொள்வார்கள்
கொஞ்சுபவர்கள் ஏங்கும் வரை
ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொல்வார்கள்
No comments:
Post a Comment