ஆள் கூடினால் நிலை மாறும் -உங்கள் நிலை?
ஆள் கூடினால் நிலை மாறும் .அதாவது நீங்கள் ஒரு நபராக சென்று ஒரு தவறையோ அல்லது கோரிக்கையையோ நபர் ஒருவரிடம் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அப்போது என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அதே சூழ்நிலையில் ஒரு ஆயிரம் நபர்கள் அதே தவறை தட்டிக் கேட்டால் அல்லது கோரிக்கையை கேட்டால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் இதே போல லட்சம் ,கோடி பேர்கள் கூடினால் என்ன ஆகும்? இது தான் ஆள் கூடினால் நிலை மாறும் என்னும் விதி.
தற்போது இந்த விதியை நம் அன்றாட வாழ்வில் எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.நீங்கள் உங்கள் வீட்டில் நல்ல சுவையான உணவை தனி ஆளாக சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அப்போது அதன் சுவை என்ன ?அதே உணவை உங்கள் தாய் தந்தை ,சகோதரர் ,சகோதரி ,மனைவி ,குழந்தைகள் என்று எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் போது அதன் சுவை என்ன உணர்ந்து பார்த்திருக்கிறீர்களா?அந்த உணவின் சுவை கூடி இருப்பதை உணரலாம் ,ஏன் இந்த மாற்றம் சிந்தனை செய்ததுண்டா?.
நீங்கள் ஒரு சினிமாவை வீட்டில் தனியாக உட்கார்ந்து பார்க்கின்றீர்கள் அப்பொழுது உங்கள் மன நிலை என்ன?அதே திரைப் படத்தை ஆர்ப்பரிக்கும் ஒரு திரையரங்கத்தினுள் ஆயிரம் பேரோடு பார்க்கின்றீர்கள் அப்பொழுது உங்கள் மன நிலை என்ன?ஏன் இந்த மாற்றம். இந்த உணர்வு தான் மனிதனை சமூக மயமாக்கலுக்கு அடிப்படை.இருந்துவிட்டு போகட்டுமே இதனை ஏன் நான் தெரிந்து கொள்ள வேண்டும் ?என்று கேட்கின்றீர்களா.
மனிதன் ஒரு சமூகப் பிராணி அவன் சமூகத்துடன் சேர்ந்துதான் வாழ முடியும் சமூகத்தை விட்டு வாழும் மனிதன் ஒன்று தெய்வமாகவோ அல்லது மிருகமாகவோதான் இருக்க முடியும் என்கின்றான் அரிஸ்டாட்டில் .அதாவது மனிதன் சமூகத்தை விட்டு விலகி கண்டிப்பாக வாழ முடியாது என்று பொருள் .அப்படிப்பட்ட நமது வாழ்வின் அன்றாட அடிப்படையாகி விட்ட சமூகத்தில் நாம் வாழ்வதற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்ளத்தான் இந்தக் கட்டுரை.
நமது வாழ்வினை நமது கண்ணுக்கு சுத்தமாகத் தெரியாத சமுகம் எப்படி பாதிக்கின்றது ?அதனை நமது வாழ்வின் மேண்மைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
நாம் இந்த சமூக வாழ்வில் பல்வேறு கூட்டு மன நிலைகளுக்கு உட்பட்டு வாழ்ந்து வருகின்றோம் ,எப்படி ,முதலில் நமது குடும்பம் என்னும் கூட்டு மன நிலை,அடுத்து நாம் மாணவராக இருந்தால் மாணவன் ,நமது வகுப்பு,நமது பள்ளி,நமது தெரு,ஊர் ,தொழில் செய்யும் இடம் ............இப்படி பல்வேறு கூட்டு மன நிலைகளில் அவ்வப்பொழுது சூழ்நிலைகளுக்கு ஏற்று வாழ்ந்து வருகின்றோம் என்பதை உணர வேண்டும்.
இந்த கூட்டு மனநிலைகளில் ஏற்கனவே மற்றொருவர் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டத்தில் நாம் இணையலாம் என்பதையும் ,நாமே பல கூட்டு மன நிலைகளை உருவாக்கலாம் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் .
கூட்டு மன நிலை என்பது ஒரு கியர் போல ,நாம் அதனுள் செலுத்தும் சிறிய சக்தியும் பெரிதாக ,கூட்டத்தினரின் மனநிலை ,எண்ணிக்கைக்கு அபரிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் . நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஆள் கூடினால் நிலை மாறும் என்னும் விதியை உணர்ந்து நீங்கள் தற்பொழுது எந்த சூழ்நிலைகளில் இருக்கின்றீர்களோ அந்த சூழ்நிலைகளில் வெற்றிகரமான கூட்டு சூழ்நிலைகளை உருவாக்கி உங்கள் வாழ்க்கை நிலைகளை மாற்றலாம்.
No comments:
Post a Comment